Saturday, December 15, 2012

ரியல் அஞ்சாநெஞ்சன் அஜித்

                              வயதும் புறத்தோற்றமும்  பிரதானமான விஷயங்களாக இருக்கும் திரைத்துறையில் அஜித் ஒரு ஆச்சர்யம். அவருடைய சால்ட் அன் பெப்பர் லுக்கைப் பார்க்கும் போது உண்மையில் ஆச்சர்யமாக இருக்கிறது. வயதை இவ்வளவு வெளிப்படையாகத் தெரிவிக்கும் நடிகரும் இவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். விக்ரமிடம் ஒரு பேட்டியில் அவர் வயதைக் கேட்டபோது தெரிவிக்க மறுத்துவிட்டார். இது வரையில் அவர் பிள்ளைகளின் போட்டோவையும் வெளியிட்டதில்லை (உத்தேசமாக அவர் வயதைக் கணக்கிட்டு விடலாம் அல்லவா). 
                            இந்திய காஸ்மட்டிக் சந்தையின் மதிப்பு பல்லாயிரம் கோடி என்கின்றனர். சில பல மேக்கப் சாதனங்களைப் பயன்படுத்தினால்தான் நீ தேறுவாய் என்று மீடியாக்கள் அலறுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் நாம் நாமாக இருப்பதற்கு அசாத்தியமான தன்னம்பிக்கை தேவையாக இருக்கிறது. மேக்கப் இல்லாமல் உங்கள் முகத்தைக் காட்டத் துணிவீர்களா? என்று கேட்கிறது ஒரு சோப் விளம்பரம். நம்முடைய பலங்களை நாம் அறிந்திருந்தோமென்றால், நம்முடைய தோற்றம் பலவீனமாய் இருக்கும் பட்சத்தில் அதை பொருட்படுத்தாமல் இருக்கக் கூடிய மன திடம் நமக்கு வாய்க்கும். எங்கள் வகுப்புத்தோழர்களில் அனேகருக்கு ரோல்மாடலாக, இன்பிரேஷனாக (நான் உட்பட) இருந்தவர் எங்களின் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய பேராசிரியர்  டாக்டர்.மகிழ் கார். There is nothing spectacular about his looks. ஆனால் அவரின் அறிவு - சான்ஸே இல்லை.
                          நாம் என்ன தான் மேக்கப்பெல்லாம் போட்டுக்கொணாடாலும் கடைசியில் நாம் யார் என்பதற்காகத்தான் நாம் மதிக்கப்படப்போகிறோம் - நாம் எப்படி தோற்றமளிக்கிறோம் என்பதற்காக அல்ல. எல்லா சாயமும் ஒரு நாள் வெளுத்துவிடும்.

A thing of beauty is a joy forever;
A thing of truth is a thing of beauty.

உண்மையே அழகு.

Friday, November 30, 2012

மனீஷா கொய்ராலாவிற்கு கான்சர்

பிரபல நடிகை மனீஷா கொய்ரலாவிற்கு கான்சர். சில நாட்களுக்கு முன் ஒரு சமூக வலைத்தளத்தில் புட் பாய்சனிங்கால் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்திருந்தார். தான் கட்டிக்கொண்டிருக்கும் புதிய வீட்டிற்காக நேபாளில் தங்கியிருக்கும் மனீஷா இரு தினங்களுக்கு முன் சுயநினைவை இழந்து கீழே விழுந்திருக்கிறார். அது வரை புட் பாய்சனிங் என்று நினைத்துக்கொண்டிருந்த அவரின் குடும்பத்தார் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக அவரை மும்பை கொண்டு வந்திருக்கின்றனர். ஜஸ்லோக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுள்ள அவர், இச்செய்தியை மிகத் தைரியமாக எதிர்கொண்டதாக அவரின் தோழி தெரிவிக்கின்றார். விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.

கௌதம் மேனன், மணிரத்னத்துக்குப் படம் எடுக்கத் தெரியாது - தயாரிப்பாளர்கள் பாய்ச்சல்

சமீபத்தில் மணிரத்னத்தின் பல்வேறு பேட்டிகள் ஒரு புத்தகமாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு பேட்டியில் தான் இயக்கியதில் தனக்குப் பிடிக்காத படம் இதயக்கோயில் என்று குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் கோவைத்தம்பி டென்ஷனாகிவிட்டார். முதல் படம் தோல்வியடைந்த ஒரு புது இயக்குனருக்கு, அடுத்த படம் வாய்ப்புக் கொடுக்க எந்த தயாரிப்பாளர் முன்வருவார்? அந்த நிலையில் இருந்த மணிரத்னத்திற்கு அவர் வாய்ப்பு கொடுத்ததே பெரிய விஷயம்.  Beggars cannot be choosers என்பதை உணர்ந்துதான் மணிரத்னமும் இன்னொருவரின் கதையை இயக்கித்தருவதற்கு ஒப்புக்கொண்டிருப்பார். அப்போது அவருக்கு அந்த வாய்ப்பே பெரிய விஷயமாக இருந்திருக்கும். இதே போல்தான் கௌதம் மேனனும். லேப்டாப்பை வைத்துக்கொண்டு கதை சொல்வதற்கே தடுமாறியதாக காக்க காக்க திரைப்படத்தின் தயாரிப்பாளர் சொல்கிறார். ஆனால் படம் வெற்றியடைந்த பிறகு தயாரிப்பாளரைபற்றி எக்கச்சக்க குறை சொல்லி பேட்டி தருகிறார் கௌதம். தயாரிப்பாளரிடம் குறைகள் இருந்திருக்கலாம். ஆனால் நன்றி மறப்பது நன்றன்று. விக்ரமுக்கு நீண்ட வருடங்களுக்குப்பின் சேது ஹிட். அதற்கு அடுத்து அவர் நடித்த படம் விண்ணுக்கும் மண்ணுக்கும். கதையை ஓகே செய்து, வாய்ப்பை ஒப்புக்கொண்டு, நடித்து முடித்துப், பின் படம் சரியாக ஓடாத போது இயக்குனரைப் பற்றி அளவில்லாத குறை சொன்னார் விக்ரம். முதலில் ஏன் ஒப்புக்கொண்டீர்கள் Vikram?
நாம் ஒரு புது இடத்தில் வேலைக்குச் சேரும்போதோ, புது ஏரியாவில் குடி போகும்போதோ, அங்கே இருக்கும் மற்றவர்களால் அதிகம் கண்டுகொள்ளப்படாத ஒருவர் நம்முடன் பழகி நம்மைப் புதிய சூழலுக்கு  familiarise பண்ணி விடுவார். முதலில் நமக்கும் அந்த நட்பு மிகத்தேவையாக இருக்கும். பின்னர் நாம் மற்றவருடன் பழகியவுடன் நாமும் அந்த முதல்வரைக் கண்டுகொள்ளமாட்டோம். இது சர்வசாதாரணமாக எல்லா இடங்களிலும் நடப்பதுதான். அட்லீஸ்ட் பின்னொரு நாளில் அவர்களைப் பற்றி குறை சொல்லாமலாவது இருப்போம்.
காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

Saturday, November 17, 2012

சொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா?

ஜீ தமிழ் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பெர்சனல் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்கிறார் நிர்மலா பெரியசாமி. இந்நிகழ்ச்சியில் வரும் முக்கால்வாசி பிரச்சினைகள் முறையற்ற காதல் என்று சொல்லப்படுபவைதான். முறையற்ற காதல் என்று சொல்லப்படுவது எது? ஒரு திருமண பந்தத்தில் இருக்கும் ஆண் அல்லது பெண், வேறொரு பெண் அல்லது ஆணின்பால் ஈர்க்கப்படுவதை முறையற்ற / கள்ளக்காதல் என்கிறோம்.  இதனால் ஏற்படும் பிரச்சனைகளும் மன உளைச்சல்களும் ஏராளம். அந்த ஷோவுக்கு வந்த ஒரு பெண் சொல்கிறார் தன் கணவரைப்பற்றி - தினமும் தண்ணி போடுறார்ம்மா. வீட்டுக்கு, பிள்ளைகளுக்குச் செலவுக்குக் காசே குடுக்குறதில்ல. எந்த நேரமும் அடி, உதைதான். (இன்னொரு ஆணைச் சுட்டிக்காட்டி) அந்த நேரம் இவரு தான்ம்மா ஆறுதலா இருந்தாரு. இந்த ஷோவுக்கு வரும் பெண்கள் சொல்லும் சில விஷயங்களை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அவ்வளவு வக்ரங்கள், குரூரங்கள். இப்படிப்பட்ட சூழலில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனை விட நல்லவனாக, ஆறுதலாக இருக்கும் ஒரு ஆண்மகன்பால் ஈர்க்கப்படுவது இயல்புதானே.
  மனிதமனம் என்பது ஒரு பலவீனமான, காற்றில் ஆடும் கொடியைப்போன்றது. தான் பற்றிக்கொண்டிருந்த கொழுக்கொம்பு பயனற்றதாகும் போது தன் ஆயிரம் கரங்களைக் காற்றில் வீசி வேறோர் கொம்பைப் பற்றிக்கொள்வது தான் அதன் இயல்பு. சில ஆண்கள் படும் துயரங்களும் பெண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. வாய் ஓயாமல் திட்டிக்கொண்டேயிருக்கும் மனைவியை முதல் மரியாதை படத்தில் பார்த்த போது மிகைப்படுத்தல் - ரொம்ப ஓவரா காட்டுறார். இப்டிலாம் இருப்பாங்களா என்றே நினைத்தேன். இதெல்லாம் சாதாரணம் என்று நினைக்கக்கூடிய அளவுக்கு மனைவிமார்களை நிஜத்தில் பார்த்தாயிற்று.
 இந்த மாதிரியான உறவுச்சிக்கல்களுக்கு நிர்மலா பெரியசாமி சொல்லும் தீர்வு - நீங்க சொல்றது எனக்கு நல்லா புரியுது. இந்த மாதிரி நெலம வேற ஒருத்தர்க்கு வரக்கூடாது. ஆனா முதல் கல்யாணத்த சட்டப்பூர்வமா முடிச்சுட்டு, இன்னொரு உறவுக்குள்ள போங்க. அதான் முறையானது. - என்கிறார். அதே நேரத்தில் தன் வாழ்க்கை சரியில்லையென்று சொல்லிக்கொண்டு, ஏற்கனவே நல்லவொரு திருமண பந்தத்தில் இருப்பவர்களின் மனதைக் கலைத்து தன் பக்கம் ஈர்ப்பவர்களைக் கடுமையாகக் கண்டித்து சம்பந்தப்பட்ட இருவர்மேலும் போலீஸ் நடவடிக்கை எடுக்கச் செய்கிறார்.
இது மிகச்சரியான தீர்வு என்றே எனக்குப் படுகிறது. நல்ல திருமண வாழ்க்கை அமையப்பெற்றவர்கள் பாக்கியவான்கள். இவர்களால் சிக்கலான திருமணத்தில் இருப்பவர்களைப் புரிந்து கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன். தெரு நாய்களுக்காகக் கவலைப்படும் காரில் போகும் கனவான்களின் மனநிலை தான் இவர்களுக்கு இருக்கும். பிள்ளையோடு தெருவில் நடக்கும்போது 4 நாய்கள் சூழ்ந்து கொண்டு கிர்ரென்று கூரிய பற்களைக் காட்டும் பயங்கரத்தை இவர்கள் அறிய மாட்டார்கள்.  உங்களில் பாவம் செய்யாதவன் இவள் மேல் கல்லெறியட்டும் என்றார் ஒரு மகான். கல்லெறியும் முன் யோசிப்போம்.
Happiness in marriage is entirely a matter of chance - Jane Austen. இது காலங்களைக் கடந்த உண்மை.

Friday, November 16, 2012

லக்சுரி அப்பார்ட்மென்ட் வாங்குவது புத்திசாலித்தனமா?

ரியல் எஸ்டேட்டின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் - லக்சுரி அப்பார்ட்மெண்ட்ஸ். ஓஎம்ஆரில் லொக்கேட்டட்; ஜிம், ஸ்விம்மிங் பூல், க்ளப் ஹவுஸ், ஜாகிங் ஏரியா, டென்னிஸ் கோர்ட், பிள்ளைகளுக்குப் ப்ளே ஏரியா எல்லாம் இருக்கு என்று கேட்கும்பொதே மெய் சிலிர்த்து விடும் நம் மேல் மத்திய தர வர்க்கத்தினருக்கு. நாம் அனுபவிக்காததை நம் பிள்ளைகள் அனுபவிக்கட்டும் என்று தான் நாம் முக்கால்வாசி விஷயங்களை வாங்குகிறோம்.
       ஆனால் லக்சுரி அப்பார்ட்மெண்ட்டுகளின் மெயின்டெனென்ஸ் காஸ்ட்டைக் கவனத்தில் கொள்ளத் தவறிவிடுகிறோம். சுமாராக 5200 ரூபாய் வரை ஒரு 1200 ச.அடி ப்ளாட்டுக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதாவது ரூ.3.50 ச.அடிக்கு + வாட்டர் ட்ரீட்மெண்ட் ப்ளாண்ட்டுக்கு ரூ.600 + குடிநீருக்கு ரூ.400. க்ளப்ஹவுஸ் இருந்தால் இதோடு சேர்த்து ரூ.1500. மொத்தம் ரூ.7000.
   ரூ.60000 டேக்ஹோம் பே உள்ள ஒருவர் 30 லட்சம் லோன் போட்டு இப்படி ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கினால், மாதாமாதம் ரூ.32000 ஈ.எம்.ஐ + ரூ.7000 மெயின்டெனென்ஸ் கொடுத்தால் மிச்சம் ரூ.21000 த்தைக் கொண்டு பிற செலவுகள் அனைத்தையும் சமாளிக்க வேண்டும். இவ்வளவு மெயின்டனென்ஸ் காஸ்ட் கொடுப்பது வொர்த் தானா? மிஞ்சி மிஞ்சி போனால் வாரத்தில் 2 நாள் ஸ்விம் பண்ணுவோம் (அதுவும் சந்தேகம்தான்). வாக்கிங்காவது, ஜாகிங்காவது. அப்புறம் - யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்காக டீ ஆத்துவது? பேசாமல் இந்த ப்ரில்ஸ் இல்லாத நல்ல அப்பார்ட்மெண்ட்டாக வாங்கி, ரூ.2 மெயின்டெனென்ஸ் கொடுத்து சந்தோஷமாக வாழ்வோம்.

Thursday, November 1, 2012

மதபோதகர்களின் பிடியில் ஆந்திர சாப்ட்வேர் இன்ஜினியர் பெண்

சிடிஎஸ்ஸில் வேலை பார்க்கும் சாப்ட்வேர் இன்ஜினியர் பெண்ணைக் கட்டாய மதமாற்றம் செய்ததாக அவரது பெற்றோர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பெண்ணை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த உலகளாவிய மதமாற்றத்தின் பின்னணியில் பெரும் வணிக, அரசியல் நோக்கங்கள் உள்ளன என்று சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதிரியான எஸ்டாபிளிஷ்ட் நிறுவனங்களைப்பற்றி நாம் பேச வேண்டாம். மாறாக நான் தெரிந்து கொள்ள விரும்புவது, நம் பக்கத்து வீட்டு டெய்ஸி அக்கா, ஆபிஸில் நம்முடன் பணிபுரியும் பெட்ஸி முதலானோர் ஏன் யாரோ ஒருவரை மதமாற்றுவதைப் பெர்ஸனல் அச்சீவ்மென்ட்டாகக் கருதுகிறார்கள்? ஏ தோவொரு தெய்வீக நொடியில் ஏற்படும் வார்த்தைப்படுத்தமுடியாத இறையுணர்வால் ஆட்கொள்ளப்பட்டு ஏசுவே தேவன் என்று அவர் கொள்கைகளைப் பின்பற்றுவது வேறு. மாறாக, நீங்க கும்புடறெதெல்லாம் கல்லு. அதால பேச முடியுமா? என்று அபத்தமாக அமெச்சூராகப் பேசி எங்க தேவன் அதப்பண்ணாரு இதப்பண்ணாரு என்றால் எரிச்சலாக வருகிறது. நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் - என்னவொரு ஆழமான வரி. நாதன் நம்முள் இருக்கிறான், நட்ட கல் ஏன் பேச வேண்டும்?
            மதம் மாற்றப்பட்டவர்களும், நான் ஆண்டவருக்காக வீட்டில் எல்லோரையும் சமாளித்தேன். பிசாச கும்பிடமாட்டேன் என்று ரொம்ப அறிவாளியாகப் பேசுவார்கள். நீங்கள் என்ன ஆண்டவருக்காகப் பண்ணுவது? எங்கும் நிறை பரம்பொருள் நம்மை நம்பியா இருக்கிறான். அவனருளால் அவன் தாள் பணிந்து என்கிறார் மாணிக்கவாசகர். அவன் தாள் பணிவதற்கும் நமக்கு அவன் அருள் வேண்டும். மாறாக நாம் ஆண்டவருக்கு அருள் புரிவதாகப் பேசிக்கொண்டு அலைகிறோம்.
               இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், பைபிளைப் பற்றி ஓயாமல் நம்மிடம் பேசும் யாரும் அதைக்கடைப்பிடிப்பவர்களாக இல்லை. நான் சிலையக்கும்பிடமாட்டேன். ஏன்னா பைபிள்ள அப்டிதான் இருக்குஎன்று சொல்லும் கொலீக்ஸ், பக்கத்து வீடுகளைப் பார்த்திருக்கிறேன் ஆனால் நான் என் சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்குச் செலவழிக்கிறேன். ஏனென்றால் பைபிளில் அப்படித்தான் இருக்கு என்று சொல்லும் அண்டை அயலாரை நான் இன்னும் பார்க்கவில்லை. அமைதியாக தங்கள் காரியங்களைக் கவனித்துக்கொண்டு தம்மால் இயன்றதைத் தேவைப்படுபவர்களுக்குச் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தும் கிறித்துவர்கள் ஆண்டவரின் பெயரை அனாவசியமாகப் பயன்படுத்துவதில்லை. அவர்கள் வார்த்தைகளைக் கேட்டு இல்லை மாறாக அவர்கள் வாழ்க்கையைப் பார்த்தே மக்கள் அவர்களை எடைபோடுகிறார்கள்.  
இறுதியாக - கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பதே எல்லா கடவுளர்க்கும் பொருந்தும். ஆழமான நீர்நிலை அமைதியாக இருக்கும். அவசரப்பட்டு ஆண்டவனைப் பற்றி பேசிவிடாமல் இருக்க ஆண்டவன்தான் அருள்புரிய வேண்டும்.

Tuesday, October 23, 2012

முக்தா சீனிவாசனை முறைத்துக்கொள்ளும் கமல்

கமலுக்கு லீகல் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார் முக்தா சீனிவாசன். பழம்பெரும் தயாரிப்பாளரான முக்தா சீனிவாசன் 1947ம் ஆண்டு முதல் தமிழ்த்திரையுலகிலிருக்கிறார். இவர் இயக்கிய முதலாளி திரைப்படத்திற்காக ஜனாதிபதி ராதாகிருஷ்ணனிடமிருந்து தேசிய விருது பெற்றவர். திரையுலகின் ஜாம்பவான்களான டி.ஆர்.மகாலிங்கம், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், பாலச்சந்தர், மு.கருணாநிதி போன்ற பலரோடும் பணிபுரிந்திருக்கிறார். கமலின் நாயகன் உட்பட சிம்லா ஸ்பெஷல், பொல்லாதவன், அந்தமான் காதலி முதலிய ஏராளமான படங்களின் தயாரிப்பாளர். இவ்வளவு அனுபவம் மிக்க தயாரிப்பாளர், இயக்குனரைத்தான் வம்புக்கிழுத்திருக்கிறார் கமலஹாசன்.
            நாயகன் படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியிருப்பதை ஒட்டி ஹிண்டு நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் கமல். அதில் நாயகன் படத்தயாரிப்பாளரைப் பற்றி எக்கச்சக்க குறைகள் சொல்லியிருக்கிறார். பம்பாயில் படமெடுக்க தயாரிப்பாளர் தயாராக இல்லை, அவர் சினிமாவை வியாபாரமாக ட்ரீட் செய்தார், கலை வடிவமாகப்பார்க்கவில்லை - இது கட்டுரையின் சாராம்சம்.  
                     சரி, கமல் தயாரிப்பாளராக இருந்த படங்களின் லிஸ்ட் கீழே உள்ளது - அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், மகளிர் மட்டும், சதிலீலாவதி, விருமாண்டி, விக்ரம். மேற்சொன்ன படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸ் மெகாஹிட்.  இவரது கலை மற்றும் டெக்னாலஜி தாக சோதனை முயற்சிகள் - பேசும் படம், ஆளவந்தான், தசாவதாரம் ........ இதில் ஏதாவது ஒன்று அவருடைய தயாரிப்பா? ஆளவந்தான் தந்த அடியிலிருந்து இன்னும் கலைப்புலி தாணு மீண்டதாகத் தெரியவில்லை. இதே கமல் அவரது தயாரிப்பில் செய்த சோதனை முயற்சி - குணா, உன்னைப்போல் ஒருவன், மும்பை எக்ஸ்பிரஸ் ... இந்தப்படங்களுக்கு மிஞ்சி மிஞ்சிப்போனால் என்ன செலவாயிருக்கும்?? தான் தயாரிப்பாளராயிருக்கும் போது ஒரு பட்ஜட், மற்றவர் தயாரிப்பாளராயிருக்கும்போது வேறொரு பட்ஜட். இதுவே கமலின் நிலைப்பாடு. அப்படியிருக்கையில் எந்த அடிப்படையில் ஒரு பழம்பெரும் 82 வயது இயக்குனர், தயாரிப்பாளரை இவர் அவமானப்படுத்துகிறார்?
எல்லோரும் பணம் சம்பாதிக்கத்தான் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுகின்றனர். கமலும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரெல்லாம் உங்களை வைத்துப் படமெடுத்ததால்தான் இன்று நீங்கள் இந்நிலையில் இருக்கிறீர்கள் ஐயா. பழசை மறக்க வேண்டாம்.

Tuesday, October 16, 2012

எதிர்பார்ப்பைக் கிளப்பி ஏமாற்றிய தமிழ் சினிமா பிரபலங்கள்-2

இந்தத் தொடர் பதிவில், இந்த வாரம் இயக்குனர் மணிரத்னத்தைப் பற்றி பகிர விருப்பம். மணிரத்னத்தின் படம் திரையுலக சுஜாதா நாவல். மிக அழகான நடை.அழகே அழகான விஷுவல்ஸ்.லைட் மூவிஸ் வரிசையில்- மௌனராகம், அக்னிநட்சத்திரம், அலைபாயுதே, கமர்சியல் ஹிட்டாக நாயகன், தளபதி, கொஞ்சம் ஹெவி சப்ஜக்ட்டில் அஞ்சலி, ரோஜா, பம்பாய் இவைகள் மிகவும் ரசிக்கத்தக்க விதத்தில், என்ன ஒரு அருமையான காட்சிகள், நடிப்பு, இசை - மௌனராகம் கார்த்திக் இன்று வரை ஒரு துறுதுறுவென இருக்கும் ஹீரோவின் அடையாளம்.(இப்போதைய கதாநாயகிகளும் கதாநாயகனை உனக்கென்ன மௌனராகம் கார்த்திக்னு நெனப்பா என்று கேட்கிறார்கள்). இப்படி என்றும் இனிமையாய் இருக்கும் படங்களைத் தந்த மணிரத்னத்தின் சமீபத்திய 2, 3 தமிழ்ப் படங்கள் - டிஸாஸ்ட்ரஸ். 

கடைசியாக வெளிவந்த ராவணன் - எந்த தமிழ் கிராமத்தில் இப்படியெல்லாம் டான்ஸ் ஆடுகிறார்கள், எந்த தமிழ் கிராமம் பார்ப்பதற்கு அவர்கள் காண்பித்த கிராமம் போல் இருக்கிறது? இவர் தமிழ் ஹிந்தி - 2 மொழிப்படத்தையும் ஒரே செட் போட்டு எடுத்து விட முயற்சிக்கிறார். முடிவு, அது தமிழ்ப்படமாகவும் இல்லை, ஹிந்திப்படமாகவும் இருப்பதில்லை. நம்மால் படத்தோடு ஐக்கியமாகவே முடிவதில்லை.

ஆய்த எழுத்து - காட்சிகளில் இவரது முந்தைய படங்களில் இருந்த யதார்த்தம் இல்லை, வசீகரம் இல்லை. மிகைப்படுத்தல் தான் துருத்திக்கொண்டு நிற்கிறது. குறிப்பாக சூர்யாவின் காதல் காட்சிகள் - தவிர்க்க முடியாமல் தளபதியில் ரஜினியும், ஷோபனாவும் காதல் தோல்வியின் போது சந்தித்துக்கொள்ளும் காட்சி நினைவில் வருகிறது - அழாதே என்று சொல்லும் ரஜினியின் உக்கிரமான காதல் - தொய்ந்து நடக்கும் ஷோபனாவை, அவர் அறியா வண்ணம் திரும்பிப் பார்க்கும் ரஜினி - என்னவொரு சீன்...

உயிரே படமும் தமிழ், ஹிந்தி குழப்பத்தில் அடி வாங்கியதுதான். மணிரத்னம் சார் பிளீஸ், தமிழர்களுக்கென்று பிரத்தியேகமாக படம் எடுங்கள். மௌனராகம், அக்னிநட்சத்திரத்தில் பார்த்த மேஜிக்கை மீண்டும் பார்க்க மிக ஆவலாக இருக்கிறோம்.

Saturday, October 6, 2012

எதிர்பார்ப்பைக் கிளப்பி ஏமாற்றிய தமி்ழ் சினிமா பிரபலங்கள் - 1

ஒன் மூவி வொண்டர், flash in a pan என்றெல்லாம் சொல்வார்களல்லவா - அதைப்போன்று தங்கள் திறமையால் நடிப்பு, இயக்கம், இசைத்துறைகளில் இரண்டு, மூன்று படங்களில் நம்மைத் திரும்பிப்பார்க்க வைத்த பிரபலங்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நம்மை மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். சிலர் திரையுலகிலிருந்து காணாமலே போய்விட்டார்கள். அவர்களில் சிலரைப்பற்றி ஒரு ரவுண்ட் வருவோம்.

முதலில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா
வாசுதேவநல்லூரில் பிறந்து தன் 31வது வயதில் 1999ம் ஆண்டு வாலி படத்தை இயக்கினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்த படம் குஷி. வாலி படத்தில் கூட சாலிடான கதை இருந்தது. ஆனால் குஷி படத்தின் துவக்கத்திலேயே இவங்க 2 பேரும் தாங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க என்று சொல்லிவிட்டார். எனவே எந்த விதமான திருப்பங்களுக்கும், சஸ்பென்ஸ்களுக்கும் இடமில்லை. திரைக்கதைதான் பேசியாக வேண்டும். இந்நிலையில் மாலை கோர்ப்பது போல் திரைக்கதையைக் கோர்த்து என்ன ஒரு அருமையான வெற்றிப்படத்தைக் கொடுத்தார். திரைக்கதையில் பாக்யராஜுக்கு அடுத்து ஒருவர் கிடைத்துவிட்டார் என்று மிகப்பாஸிட்டிவான ரெவ்யூக்கள். நிகழ்ச்சிகளைக் காட்சிப்படுத்துவதோ, எழுதுவதோ கஷ்டமில்லை. ஆனால் மனவுணர்வுகளைக் காட்சிப்படுத்துவதும், வார்த்தைகளாக்குவதும் மிகக் கடினம்.  அதை சர்வசாதாரணமாக குஷியில் செய்து காட்டினார். இப்படி இவர் இயக்குனராகவே தொடர்ந்திருக்கலாம். கதாநாயகனாக நடிக்கவேண்டும் என்று இவர் எடுத்த முடிவு தவறு என்றே நினைக்கிறேன்.
இருப்பினும் இவர் ஹீரோவாக நடித்த நியூ படம் முதல் நாள் 1 கோடி ரூபாய் வசூலித்ததாம். இது ஒரு பாக்ஸ் ஆபிஸ் சாதனை. அதிலிருந்து துவங்கியது இவருடைய வீழ்ச்சி. இவருடைய டயலாக் டெலிவரி தவிர்க்க முடியாமல் நகைச்சுவை நடிகர் பாண்டுவை நினைவுறுத்துகிறது. கதாநாயகனுக்குரிய பாடி லாங்வேஜ், டயலாக் டெலிவரி இவரிடம் இல்லை.
தன்னை இயக்குனராகவே அடையாளப்படுத்திக்கொண்டு அந்தப்பாதையிலேயே இவர் தொடர்ந்திருக்கலாம். பரவாயில்லை. இட்ஸ் நாட் டூ லேட். வாலி, குஷி போன்ற மிக அருமையான கதை, திரைக்கதை உடைய படங்களை இவர் தருவார் என்று நம்புவோம்.
இன்னும் சில பிரபலங்கள் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில்..........

Friday, October 5, 2012

ராசிக்கு ஆறாம் இடத்திலிருக்கும் சனிபகவான் அதிர்ஷ்டம் தருவாரா?

ஒவ்வொரு கிரகங்களும் பெயர்ச்சி ஆகும்போது, சனிப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள், ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் என்று பார்த்துத் தள்ளுவது தமிழர்களின் ஒரு பொதுவான குணம். ஏதாவது ஒன்று நடந்து நமக்கு நல்லகாலம் பிறந்துவிடாதா என்று நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை. நாலாப்பக்கமும் வாழ்க்கை நசுக்கும்போது வெளியேற வழிதேடுவது மனித இயல்பு.

இதைத்தான் நம் பகுத்தறிவு சிங்கம் கருணாநிதியும் செய்திருக்கிறார். குருபகவான் அருள் பெறுவதற்காக மஞ்சள் துண்டு அணிந்தவர், தற்போது கறுப்புக்கு மாறியிருக்கிறார். காரணம், இவர் ரிஷப ராசிக்காரர். ரிஷப ராசிக்கு இப்போது ஆறாமிடத்தில் இருக்கிறார் சனிபகவான். ஜோதிட ரீதியில் இது ஒரு நல்ல அமைப்பாம். கறுப்புச்சட்டை அணிந்தால் ரொம்ப விசேஷமாம்.ஆனால் இதையெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா? அதனால் ஜெயலலிதா மீது பழியைப் போட்டுவிட்டு கறுப்புச்சட்டை.

இது தெரியாமல் தொண்டர் படையும் கறுப்புச்சட்டை அணிந்து கொண்டு ஆயிரம் விளக்குப்பகுதி தொடங்கி எல்லா இடத்திலும் சுற்றிக்கொண்டிருக்கிறது. தொண்டர்களே நீங்கள் என்ன செய்தாலும் தலைவர்தான் நல்லாயிருப்பார். அதனால் வடிவேலு சொன்னது போல் -  கப்பித்தனமா பேசாம புள்ளக்குட்டிய படிக்க வைங்க.

Friday, September 28, 2012

தாண்டவம் படப்பிரச்சினை - அமீர் உள்ளிட்ட 8 இயக்குனர்கள் ராஜினாமா

இயக்குனர் விஜய்யின் தாண்டவம் படத்தின் ஸ்கிரிப்ட் யாருடையது என்ற பிரச்சினை பெரிதாகியுள்ளது. பொன்னுசாமி என்பவர் படத்தின் ஸ்கிரிப்ட் என்னுடையது என்கிறார். அவருடைய சார்பில் வாதாடிய அமீர் - எப்படியாவது பொன்னுசாமிக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று போராடிப்பார்த்தேன். ஆனால் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பொன்னுசாமிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து நான் இயக்குனர் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்திருக்கிறேன் - என்கிறார்.
          
நாம் செய்த வேலையை யாரோ தான் செய்தது போல் காண்பித்துக்கொள்வது, நாம் செய்த வேலையை அது ஒன்றுமே இல்லாதது போலவும், அந்த வேலை எதற்குமே தேவை இல்லை என்பது போலவும் நடந்து கொண்டு பின்னர் அதையே அவர்கள் பயன்படுத்திக்கொள்வது, என்ன வேலை  செய்திருக்கிறோம் என்பதையே பார்க்காமல் மேம்போக்காக அவமானப்படுத்துவது போன்றவற்றைப் பெரிய மானேஜ்மென்ட் ஸ்கில்லாக, சர்வைவல் திறனாகப் பார்க்கும் போக்கு எக்காலத்திலும் இருக்கிறது. இது ஆறாக்காயத்தை ஏற்படுத்தும். மாங்கு மாங்கென்று வேலை செய்தவன் உட்கார்ந்திருக்க, வாய் மட்டும் பேசத்தெரிந்தவன் அல்லது சமூகத்தில் சில பல பிரிவிலேஜ்களை உடையவன் உச்சத்தில். என்ன நியாயம் இது?
   எனக்கென்னவோ தாண்டவம் உண்மையில் பொன்னுசாமியின் ஸ்கிரிப்ட்டாக இருந்தாலும் அவரால் எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. ஏனெனில் விஜய்யின் அப்பா அழகப்பன் பெரிய தயாரிப்பாளர், தயாரிப்பாளர் கவுன்சிலின் தலைவராக இருந்தவர்.
           நம்மை ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இருப்பவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அதுதான் உண்மையான நாம்.

Thursday, September 27, 2012

விகடன் குழுமத்திலிருந்து புதிய வார இதழ் - விகடன் என்ற பெயர், விகடன் தாத்தா இல்லாமல்

ஆண்டிற்கு ரூ.150 கோடி டேர்ன் ஓவர் இருப்பதாகச் சொல்லப்படும் விகடன், தமிழ்க் குடும்பங்களி்ன் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். இக்குழுமம் வெளியிட்ட  மாத, வார இதழ்கள் ஏராளம். (அவள் விகடன், நாணயம் விகடன், பசுமை விகடன், சுட்டி விகடன், மோட்டார் விகடன், சக்தி விகடன்). ஆனால் இன்று வரை விகடன் என்ற பெயர் இல்லாமலும், விகடன் தாத்தாவின் படம் இல்லாமலும் ஒரு இதழை இவர்கள் ஆரம்பித்ததில்லை.
இப்போது முதன்முறையாக விகடன் குழுமத்திலிருந்து அக்டோபர் 6 முதல், டைம்பாஸ் என்ற வார இதழ், விகடன் என்ற அடைமொழி இல்லாமலும், விகடன் தாத்தா மாஸ்காட் இல்லாமலும் வர இருக்கிறது. இதன் விலை ரூ.5.
வீட்டுப்பெரியவர்களின் ரெஸ்பான்ஸ்
            நல்ல வேளை. விகடன்ற பேர விட்டுட்டாங்க. எப்பேர்ப்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் வெளியிடப்பட்டது ஒரு காலத்துல. இன்னக்கி சினிமாக்காரங்க நியூஸ் தான் வருது. என்ன தொடர் வெளியிடுறாங்க இப்பல்லாம். விகடன்னா நாங்க படிச்ச விகடனாவே இருந்துட்டுப் போகட்டும். இப்ப வர்றதெல்லாம் வேற பேர்லயே வரட்டும்.

Monday, September 24, 2012

கோயம்புத்தூர் காதல் கொலைகளின் பின்னணி

கடந்த  2 நாட்களாகத் தமிழ்நாட்டில் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டிருப்பது இந்தக் கோயம்புத்தூர் காதல் கொலைகள் தான். 21 வயது இளைஞன் தன் சக மாணவி, அவரது தாயார் இருவரையும் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வளவு கொடூரமான க்ரைம் ஸீனை நான் பார்த்ததில்லை என்கிறார் வடவள்ளி இன்ஸ்பெக்டர். மற்றொரு சம்பவத்தில் 9ம் வகுப்பு சிறுமியை ஒரு இளைஞன் கொலை செய்துள்ளான். காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. இந்தக் கண்மூடித்தனமான கோபம்தான் காதலா?
காதல் பெயரால் நடக்கும் அபத்தங்கள் எத்தனையெத்தனை? திருமணமானவர்களில் கணவனோ, மனைவியோ வாழ்க்கைத்துணையிடம் உன் நல்லதுக்காகத்தானே சொல்கிறேன், நான் உன் மேல் பொஸஸிவாக  இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு எத்தனை கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர் - இதுவா காதல்? தளைகளும், கட்டுப்பாடுகளும் இருக்கும் இடத்தில் காதல் வராது. கட்டற்ற சுதந்திரம்தான் காதல். நம்மை நாமாக இருக்க அனுமதித்து நம்மை அன்பு செய்யும் மனமே காதல் நிறைந்தது.  Love possesses not nor would it be possessed - கலீல் கிப்ரன்.
                 நம் வாழ்க்கைத்துணையிடம் சிறுபிள்ளைத்தனமற்ற மெச்சூர்டான காதலையே கொண்டு அவன்/அவளின் மனதில் நீங்கா இடம் பெறுவோம். கலீல் கிப்ரனின் வரிகள் எப்போதும் போல் இப்போதும் எனக்குத் துணை வருகிறது. திருமணத்தைப்பற்றிய அவரின் கருத்து -
     
      Love one another but make not a bond of love:
      Let it rather be a moving sea between the shores of your souls.
      Fill each other's cup but drink not from one cup.
      Give one another of your bread but eat not from the same loaf.

ஒருவரையொருவர் நேசியுங்கள்,
ஆனால் காதலால் ஒரு தளையை உருவாக்காதிருங்கள்.
உங்களின் நேசம் - உங்கள் ஆன்மக்கரைகளுக்குள்
அலைபாயும் கடலாக இருக்கட்டும்.
ஒருவர் கோப்பையை மற்றவர் நிரப்புங்கள்,
ஆனால் ஒரே கோப்பையில் பருகாதிருங்கள்.
ஒருவர் ரொட்டியை மற்றவருக்குக் கொடுங்கள்,
ஆனால் ஒரே ரொட்டியிலிருந்து உண்ணாதிருங்கள்.

நம் துணையின் பெர்சனல் ஸ்பேஸை நாம் கட்டாயம் மதிப்போமாக. உன்னதமான காதலின் பெயராலும், திருமணத்தின் பெயராலும் வாழ்க்கைத்துணையைப் படுத்தாமலிருப்போமாக.

 For even as love crowns you so shall he crucify you.

எப்படி காதல் நமக்கு கிரீடம் சூட்டுகிறதோ அதே போல் நம்மைச் சிலுவையிலும் அறையும்.

நாம் கிரீடம் மட்டுமே சூட்டுவோம் - ஆமென்

Sunday, July 29, 2012

மணிரத்னத்தால் முடியாதது செல்வராகவனால் முடியுமா?

 கல்கியின் பொன்னியின் செல்வனை ஒவ்வொரு பத்தாண்டு காலகட்டத்திலும் (in every decade) யாராவது ஒரு திரையுலகைச் சார்ந்த பிரபலம் திரைப்படமாக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் அந்நாவலைத் திரைப்படமாக்க ஆசைப்பட்டதாக என் பெரியம்மா சொல்வார்கள். அப்போதே சிவாஜி ரசிகர்கள் - எம்.ஜி.ஆர் அதைத் திரைப்படமாக்கி நாவலைக் கெடுத்துவிடக்கூடாது என்பார்களாம். அதற்குப்பிறகு கமல் அதே ஆசையை வெளிப்படுத்தினார் - நடக்கவில்லை. பின்னர் கொஞ்ச ஆண்டுகளுக்கு முன் மணிரத்னம் அதையே சொன்னார். எங்கள் வீட்டுப்பெரியவர்கள் எல்லோரும் மணிரத்னம் அக்கதையைப் படமாக்கப் போகிறார் என்றவுடன் அலறிவிட்டார்கள்.
  இப்போது செல்வராகவன் பொன்னியின் செல்வனைப்படமாக்கப்போகிறேன் என்று கிளம்பியிருக்கிறார். பொதுவாக அனேக கொலைவெறிகளைச் சமாளிக்கும் நானே இதைக்கேட்டவுடன் அலறிவிட்டேன். பின்ன - ஆயிரத்தில் ஒருவன் பார்த்தீர்கள் அல்லவா?? ஆயிரத்தில் ஒருவனை கிளாடியேட்டருடன் ஒப்பிட்டு பேட்டி வேறு கொடுத்தார் செல்வராகவன். அவர் கிளாடியேட்டர் படம் பார்க்கவில்லையா அல்லது நாம் யாரும் அந்தப்படத்தைப் பார்த்திருக்க மாட்டோம் என்று நினைத்து விட்டாரா - தெரியவில்லை.
      எது எப்படியோ - பிரபல நாவல்களைப் படமாக்கும் போது எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். அன்னா கரீனினா, மோகமுள், சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் மற்றும் பிரியா, சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற எந்த நாவலுமே திரைப்பட வடிவில் என்னைக் கவரவில்லை. பெரிய வெற்றியும் பெறவில்லை. ஆனால் திரைக்கதையில் மிகப்பிரமாதமான மாற்றங்கள் செய்து முள்ளும் மலரும் நாவலைக் கலக்கினார் நம் டைரக்டர் மகேந்திரன். 3 இடியட்ஸும் திரைக்கதையின் சிறந்த மாற்றங்களினால் மிக நன்றாக இருந்தது. அப்படி திறமையான இயக்குனர்கள் கிடைக்கும் போதுதான் இந்த மாதிரியான மாஸ்டர் பீஸ் நாவல்கள் சோபிக்கும். எண்ணித்துணிக கருமம் திரு. செல்வராகவன்.

Monday, July 16, 2012

உலகத்துல இருக்குற எல்லா அம்மாக்களும் இதே வசனத்த தான் வேற வேற மாதிரி பேசுறாங்க

நிச்சயம் பின்னாடி வரும் எல்லா வசனத்தையும் உங்க அம்மா, உங்க வீட்ல ஒரு தடவயாவது பேசியிருப்பாங்க. நீங்களே ஒரு அம்மான்னா - நீங்களும் நிச்சயமா இது எல்லாத்தயும் பேசியிருப்பீங்க ;)

  1. பல் தேச்சுட்டியா?
  2. இன்னுமா தேய்க்கல
  3. புக் ஏன் கீழ கிடக்கு - தூக்கி ஷெல்புல வை
  4. யார் எடுத்தான்னு நான் கேக்கல. தூக்கி வைன்னு தான் சொன்னேன்
  5. இந்த டிரஸ்ஸ போட்டுக்கிட்டு வெளில வரக்கூடாது. டிரஸ்ஸ மாத்து
  6. ஆர்க்யூ பண்ணாத
  7. பின்னாடி தள்ளி வா. இவ்வளவு பக்கத்துல உக்காந்து பாக்கக்கூடாது
  8. அவன அடிக்காத
  9. ஏதாவது சொல்லணும்னா பக்கதுல வந்து சொல்லு. கத்தாத
  10. போதும். இப்ப தான ஒரு பெரிய bowl fullஆ சாப்பிட்ட
  11. சீக்கிரம் கிளம்பு. உனக்காக தான் எல்லாரும் வெயிட்டிங்
  12. பாத்ரூம் போய்ட்டு வந்துட்டியா?
  13. கட்டாயம் பாத்ரூம் போய்ட்டுதான் கெளம்பணும்
  14. பரவால்ல. try பண்ணு. வரும்
  15. அர்ஜன்ட்டா வருதா
  16. கொஞ்ச நேரம் கன்ட்ரோல் பண்ணிக்க முடியுமா?
  17. ஒரு பீஸ் சாப்ட்டு பாரு. பிடிச்சா சாப்பிடு. இல்லன்னா வச்சிரு
  18. ஹலோ, அவன் வீட்ல இல்லயே. நீங்க? (நம்ம அங்க தான் உக்காந்து பாத்துக்கிட்டு இருப்போம்)
  19. இப்பவே ஸ்விட்ச் off பண்ணு - இப்பவே
  20. ஏன்னா நான் அம்மா. அம்மா சொன்னா கேக்கணும்
உலகின் எல்லா அம்மாக்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள். நீங்க இல்லாம நாங்க இல்ல.

பின்குறிப்பு
இந்த article, Chicken soup for the soul புத்தகத்தின் ஒரு ஆர்ட்டிக்கலின் தழுவல். எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அதன் பாதிப்பில் இந்தப் பதிவை எழுதினேன்.

Wednesday, July 11, 2012

மத்திய தர மக்களை அவமதிக்கும் சிதம்பரம்

ரூ.15க்கு குடிதண்ணீரும், ரூ.20க்கு ஐஸ்க்ரீமும் வாங்கத் தயங்காத மத்திய தர மக்கள் அரிசி விலையை உயர்த்தினால் கூச்சலிடுகின்றனர் என்கிறார் செல்வச்சீமான் சிதம்பரம். 
மத்தியதர மக்கள் தினமும் 3 வேளை ஐஸ்க்ரீம்தான் சாப்பிடுகிறார்களா? குடிதண்ணீருக்காக 15 ரூபாயை செலவழிக்கிறோம் என்கிறார் வெட்கம் கெட்ட மத்திய அமைச்சர். சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் மக்களின் அடிப்படைத்தேவையான சுத்தமான குடிநீரை வழங்க இயலாத கையாலாகாத அரசின் அங்கமான இவர் விலை உயர்வைப்பற்றி என்ன கவலைப்படப்போகிறார்? 30 சதவீதம் வரி செலுத்தும் இந்த மத்தியதரத்தின் பணம் எங்கே போகிறது? அந்த பணத்தைக்கொண்டு அரசு அவர்களுக்கு என்ன வசதி செய்து தரப்போகிறது? வளர்ந்த நாடுகளில், வரி செலுத்தும் மக்களுக்கு மருத்துவம் இலவசம், தரமான கல்வி இலவசம். இங்கே புழுத்த அரிசியும், குவார்ட்டரும் கோழி பிரியாணியும்தான் இலவசம்.

மத்திய தரத்தின் வருமானத்தில் 30 சதவீதத்தைப் பிடுங்கிக்கொள்ளுங்கள். மிச்ச 70 சதவீதத்தில் டாஸ்மாக் வளரட்டும். இன்னும் ஏதாவது மிச்சமிருந்தால் அரிசி வாங்கிக்கொள்ளட்டும் - 1 ரூபாயென்ன - எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ளுங்கள். போதாதற்கு அவர்களைக் கேவலமும் படுத்துங்கள்.  ஒரு நாளுக்கு ரூ.28 சம்பாதித்தால் அவன் ஏழை இல்லை , வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவன் என்று மான்டேக்சிங் அலுவாலியாவைக்கொண்டு அறிவியுங்கள்.ஏனென்றால் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் - இவர்கள் ரொம்ப நல்லவர்கள்.

Wednesday, June 27, 2012

கனிமொழிக்கு மீண்டும் சிறை

அதிமுக அரசின் கைது நடவடிக்கைகளைக் கண்டித்து, திமுக வரும் நான்காம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளது. ஜாமீன் பெற முயற்சிக்காமல் சிறையிலேயே இருப்பவர்களுக்குக் கட்சியில் பதவியும் தரப்போகிறாராம் ஸ்டாலின்.
கருணாநிதிக்கு எதில் யார் வாரிசோ என்னவோ தெரியாது - ஆனால் அவரைப்போல் காமெடி பண்ணுவதில் அவருடைய வாரிசு நிச்சயம் கனிமொழிதான். சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு சிபிஐயிடம் சிறப்பு அனுமதி வாங்கப்போகிறாராம். மக்களை அடிமுட்டாளாக எண்ணும் கருணாநிதி மற்றும் குடும்பத்தாரின் போக்கு சொல்ல முடியாத அளவு எரிச்சலை ஏற்படுத்துகின்றது.
மேடம் கனிமொழி - நீங்கள் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சிறையை நிரப்ப அனுமதி வாங்குவதற்குப் பதிலாக, திகார் சிறையையே நிறைத்திருக்கலாம் அல்லவா - வெளியே வந்தவுடன் உங்கள் சகோதரர் உங்களுக்குக் கட்சியில் பதவியும் கொடுத்திருந்திருப்பார், நீங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு ஜாமீனுக்குச் செய்த முயற்சியும் மிச்சமாகியிருந்திருக்கும்

Thursday, June 21, 2012

குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட்ட பெண்களுக்கு ஒரு அலர்ட்

நடுத்தரக் குடும்ப மற்றும் டெக்னிக்கல்லி ஸ்கில்டு, க்வாலிபைடு பெண்கள் பலரும் குழந்தை பேற்றுக்குப்பின் வேலையை விட்டுவிடுவது மிகப் பரவலாக க் காணப்படும் ஒரு சாதாரண ட்ரண்ட். பிள்ளையப் பாத்துக்கிறதுக்காக ரூ.40000 வேலய விட்டுருக்கா - என்று ஒரு பாராட்டுப்பத்திரமும் கிடைக்கும். இதனால் ஏற்படக்கூடிய பொருளாதாரப் பின்னடைவுகளைப் பற்றி ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது ( http://uk.finance.yahoo.com/news/can-you-afford-to-be-a-stay-at-home-mum.html ). வேலையை விட்டுவிடுவதன் சாதக பாதகங்களை விரிவாக அலசியிருக்கிறார்கள். 
இதைப்படிக்கும்போது மாபசான் எழுதிய சிறுகதை ஒன்று ஞாபகம் வருகிறது.
ஒரு குடிசைப்பகுதியில் நிறைய குடும்பங்கள் வசிக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் 10, 12 பிள்ளைகள். ஒரு கனவானும், அவர் மனைவியும் தினமும் அந்தப்பகுதியைக் கடந்து வாக்கிங் செல்வார்கள். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே அந்தப் பகுதியிலிருந்து ஒரு பிள்ளையைத் தத்தெடுக்கப் பிரியப்படுவார்கள். இரு குடும்பத்தைச் சேர்ந்த தாய்மார்களிடம் பேசுவார்கள். ஒரு தாய் பசியோ, பட்டினியோ எங்கள் பிள்ளையை நாங்கள் வளர்த்துக்கொள்வோம். யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்று மறுத்து விடுவாள். மற்றொருவள் தன் கடைசி மகனைத் தத்துக்கொடுக்க சம்மதித்து விடுவாள். 
தத்துக்கொடுத்த பெண்ணை அந்தப்பகுதி மக்கள் இரக்கமில்லாதவள், பாசமில்லாதவள் என்று தினமும் திட்டுவார்கள். அதே நேரம் தத்துக்கொடுக்க மறுத்த பெண்ணைத் தாயென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று போற்றுவார்கள். வறுமையும் தொடர்ந்தது.
இப்படியாக 18 வருடம் கழிந்தபின், ஒரு நாள் தத்துக்கொடுக்கப்பட்ட பிள்ளை தன் நிஜ தாய் தந்தையரைப் பார்க்க வருவான், உயர்தர உடுப்புக்களோடு, கையில் விலையுயர்ந்த பரிசுகளும், பணமும் கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுத்து அவர்களை நன்றாகக் கவனித்துக்கொள்வான்.
இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த பக்கத்து வீட்டு வறுமையில் உழலும் பையன் தன் தாயிடம் - நீதான் என் வாழ்க்கையைப் பாழாக்கினாய். முதலில் என்னைத்தான் தத்துக்கேட்டார்களாமே நீ கொடுக்க மறுத்த்தால் இன்று என் வாழ்க்கையே வறுமையில் இருக்கிறது. செல்வச்சீமானாக இருந்திருக்க வேண்டியவன், உன்னால் இப்படியாகி விட்டேன். மகன் இப்படிச்சொல்வதோடு கதையை முடித்திருப்பார் மாபசான்.
இளம் தாய்மார்களே வேலையை விடுவதற்கு முன் யோசியுங்கள். குழந்தைக்குப் பாதுகாப்பு தேவைதான் - அதில் முக்கியமானது "பொருளாதாரப் பாதுகாப்பு"

Wednesday, June 20, 2012

பஸ்ஸில் பயணம் செய்து பல்பு வாங்கிய தேனி எம்எல்ஏ

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியின் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறார்.  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=489928. பஸ்ஸில் பயங்கர கூட்டம் போலும் - உட்கார இடம் கிடைக்கவில்லை. கண்டக்டரிடம் - நான் எம்எல்ஏங்க என்று சொல்லியிருக்கிறார். கண்டக்டர் கண்டு கொள்ளவில்லை. அவர்  பாட்டுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு தன் சீட்டில் அமர்ந்து விட்டார். எம்எல்ஏ நொந்து போய் போக்குவரத்துக் கழகத்திடம் தன் வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார். இது இன்றைய செய்தி.
இச்செய்திக்கு இரண்டு விதமான ரெஸ்பான்ஸ்கள் வந்திருக்கின்றன.
  •  முதல் டைப் ; எம்எல்ஏக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது? தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் நின்றபடிதான் பயணம் செய்கின்றனர். ஒவ்வொருவருக்கும் சீட் பிடித்துக் கொடுப்பதா கண்டக்டரின் வேலை?
  • இரண்டாவது டைப் (இது என் கருத்து) ; இதே எம்எல்ஏ கொத்துக் கொத்தாக செயின் போட்டுக்கொண்டு ஸ்கார்ப்பியோவில் பத்து, பதினைந்து ஆட்களோடு வந்து பஸ்ஸை அரை மணிநேரம் நிறுத்திப்போட்டிருந்தால், கண்டக்டரும், பயணிகளும் பயந்து நடுங்கியிருப்பார்கள். ஒரு மக்கள் பிரதிநிதிக்கு ஜனநாயக நாட்டில் சிறிய அளவில் மரியாதை தெரிவிப்பதில் ஒன்றும் தவறில்லை. 
எளிமையாக இருப்பவர்களைக் கேவலப்படுத்துவதும், தாம்தூமென்று குதிப்பவர்கள் முன் மிகப்பணிந்து செல்வதும் நம் இந்திய மனோபாவம். மாணவர்களோடு இறங்கிப் பழகும் ஆசிரியரை மாணவர்கள் மதிப்பதில்லை. சொந்தக்காரர்களில் நன்றாகப் பழகுபவரை யாரும் மதிப்பதில்லை. நன்றாகப் பழகினால் - இவனை/ளை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் - என்றே நினைக்கிறார்கள். நம் இடத்தை விட்டு கீழே இறங்காமல் மெயின்டெயின் செய்துகொண்டு, நான் பணக்காரன்/ரி, படித்தவன்/ள், நல்ல நிலையில் இருக்கிறவன்/ள், பதவியில் இருக்கிறவன்/ள் என்று ஒவ்வொரு நிமிடமும் பறை சாற்றினால்தான் பிறரின் அவமதிப்பில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். எளிமை கிளிமை எல்லாம் unaffordable ஆகி கொஞ்ச நாளாகிவிட்டது. கவிஞர் கண்ணதாசன் பாடலில்( பரமசிவன் கழுத்திலிருந்து) வருவது போல எல்லாம் இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சவுக்கியமே என்பதுதான் சரி. 
மிஸ்டர் பெரியகுளம் எம்எல்ஏ உடனே போய் தொகுதி நிதியிலிருந்து ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்குங்கள்.

Thursday, May 31, 2012

பாலாஜிசக்திவேலை வறுத்தெடுத்த பாக்யராஜ் - காரணம் என்ன?

வழக்கு எண் 18 9 திரைப்படத்தின் வெற்றிவிழா மற்றும் பாலாஜிசக்திவேலுக்கான பாராட்டுவிழா சமீபத்தில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக பாக்யராஜ் அழைக்கப்பட்டிருந்திருக்கிறார். பேசுவதற்காக மைக்கைப் பிடித்த பாக்யராஜ், வழக்குஎண் திரைப்படத்தில் இந்தக்காட்சி சரியில்லை, அந்தக்காட்சியில் லாஜிக் இல்லை என்று சகட்டுமேனிக்குக் குறை சொல்லித் தள்ளி இருக்கிறார். பாராட்டி உரையாற்றவேண்டியவர் இப்படி காய்ச்ச, படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி உட்பட மேடையிலிருந்த அனைவரும் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் நெளிந்திருக்கின்றனர்.
பாராட்டுவிழாவில் விமர்சனம் செய்யவேண்டிய அவசியமென்ன? படம் குறைகள் நிறைந்ததாக அவருக்குத் தோன்றியிருந்தால் தலைமையேற்க முதலிலேயே நாகரிகமாக மறுத்திருக்கலாமே.
ஆக்சுவலி காதல் திரைப்படத்தில் நடிக்க சாந்தனுவைத்தான் முதலில் அப்ரோச் செய்திருக்கிறார் பாலாஜி - இது பாக்யராஜே முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்த செய்தி. அருமையான ஒரு திரைப்படத்தில் அறிமுகமாயிருந்திருக்க வேண்டிய தன் மகன், இன்னும் திரையுலகில் ஒரு இடம் பெற தடுமாறிக்கொண்டிருப்பதால் ஏற்பட்ட சலிப்பு, கோபம் இவையெல்லாம் பாலாஜி மேல் திரும்பியிருக்கும் என்று நினைக்கிறேன். பிள்ளை பாசம் கண்ணை மறைத்து விட்டது இந்த திரைக்கதை மன்னனுக்கு. கூல் மிஸ்டர் பாக்யராஜ் - உங்கள் மகனும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Monday, May 28, 2012

மனைவி சொன்னதைக் கேட்டாலும் பிரச்சனை கேட்காவிட்டாலும் பிரச்சனை - தவிக்கும் தனுஷ்

3 படம் ஆரம்பித்ததிலிருந்து செய்திகளில் அடிபட்டுக்கொண்டே இருக்கிறது. கொலவெறியின் மெகா ஹிட், படம் பிரமாண்ட ப்ளாப், கஸ்தூரி ராஜா- நட்டி பிரச்சினை, ரஜினியிடம் நஷ்டத்தைத் திரும்பக்கேட்டது மற்றும் அனைத்திலும் ஹைலைட்டாக தனுஷ் - ஸ்ருதி கெமிஸ்ட்ரி என நாளொரு செய்தியும், பொழுதொரு பிரச்சனையுமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
  கஸ்தூரி ராஜா ஒரு பேட்டியில், தனுஷ் ஐஸ்வர்யா இடையே பிரச்சனை என்பது உண்மைதான். எல்லா கணவன் மனைவியிடையே இருக்கும் பிரச்சனை போல தான் இதுவும். தனுஷ் ஸ்ருதியோடு மிகவும் நெருக்கமாக நடித்தது ஐஸ்வர்யாவுக்கு வருத்தத்தைத் தந்தது என்கிறார்.
            இதில் என் சந்தேகம் என்னவென்றால் - படத்தின் இயக்குனர் சொன்னதை நடிகர் செய்திருக்கிறார். அப்புறம் இயக்குனரே ஏன் இப்படி நடித்தாய் என்றால் நடிகர் என்ன செய்வார் பாவம்.
          ஐஸ்வர்யா அவர்களே தாங்கள் சொன்னதைத் தானே தங்கள் கணவர் செய்தார். அப்புறம் ஏன் கோபித்துக்கொள்கிறீர்கள்? சொன்னதைக் கேட்டாலும் தப்பு, கேட்காவிட்டாலும் தப்பா?? என்ன கொடுமை சரவணன் இது.

Tuesday, May 22, 2012

சென்னை - பிரபல சிபிஎஸ்இ பள்ளிகளின் கட்டணங்கள்

இது ஸ்கூல் அட்மிஷன் சீசன். பிரபல பள்ளிகளில் அட்மிஷனுக்காகப் பெற்றோர்கள் அலைமோதிக்கொண்டிருக்கின்றனர். தன் பிள்ளைகளுக்குச் சிறந்ததை வழங்குவதே ஒவ்வொரு பெற்றோரின் ஆவலாக இருக்கிறது. இதற்காக தம் சக்திக்கு உட்பட்டதையும், அப்பாற்பட்டதையும் செய்ய பெற்றோர் சித்தமாக இருக்கின்றனர். மேலும் இன்ன பள்ளியில் என் பிள்ளை படிக்கிறான் என்று கூறிக்கொள்வது ஒரு முக்கியமான ஸ்டேட்டஸ் சிம்பல். பத்மா சேஷாத்திரியில் மூன்றாம் வகுப்பு வரை ஒரு வருடத்திற்கு 1,25,000 ரூபாய், டிஏவியில்ரூ. 40000 , செயின்ட் பிரிட்டோவிலும் இதே ரேன்ஜ்.
என் பிள்ளைகளையும் அனேக வருடங்கள் ஸ்டேட் ரேங்க் எடுக்க வைக்கிற ஒரு பிரபல சிபிஎஸ்இ பள்ளியில் சேர்த்து விட்டு, தற்சமயம் மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் விழித்துக்கொண்டிருக்கிறேன் - காரணம் வொர்க் லோட் மற்றும் படிப்பைத் தவிர வேறெதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமை.
பள்ளிகளும், கல்லூரிகளும் இன்று எதைக் கற்றுத் தருகின்றன? சம்பாதிப்பதற்கான வழியை. இந்த வருடம் ஐஐடி நுழைவுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவன் சொல்கிறான் - கடுமையான போட்டி மற்றவர் மேல் பொறாமையைத் தோற்றுவிக்கிறது - என்று. ஆர்.கே.நாராயணின் ஸ்வாமி அண்ட் பிரண்ட்ஸ் புத்தகம் வெளியாகி உலகப்புகழ் பெற்ற அதே வருடம், மெட்ராஸ் யுனிவர்சிட்டி  அவர் ஆங்கிலத்தேர்வில் தோல்வியுற்றதாக அறிவிக்கிறது. என்ன ஒரு அருமையான கல்விமுறை. 
சக மனிதன் மேல் பொறாமைப்படுவதும் , க்ரியேட்டிவிட்டி என்பது துளியும் இருந்துவிடக்கூடாது என்று மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுவதுமான கல்விமுறை.
என் பிள்ளைகளுக்கு நான் பின் வருவனவற்றைக் கற்றுத் தர விரும்புகிறேன்.
  • எப்போதும் மனமகிழ்ச்சியுள்ளவர்களாக, கவலைகளற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • எதையும் தைரியமாக எதிர்கொள்பவர்களாக
  • உடல், மன ஆரோக்கியம் உள்ளவர்களாக
  • மனிதத்தன்மை நிரம்பியவர்களாக, எதிலும் நேர்மை, உண்மையுள்ளவர்களாக
  • வாழ்க்கையைக் கொண்டாடுபவர்களாக இருக்க வேண்டும்
நான் சேர்த்த பள்ளியில் இவை எதையுமே அவர்களுக்குக் கற்றுத் தருவதாக எனக்குத் தெரியவில்லை.தேர்வு பயம், மார்க் பயம் இவை மட்டுமே பிரதானம்.

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரேயின் றெனக்குத் தருவாய்
என் முந்தை தீவீனைப் பயன்கள் 
இன்னும் மூளாதழிந்திடல் வேண்டும்
இனி என்னைப் புதியவுயிராக்கி
எனக்கேதுங் கவலையறச்செய்து
மதி தன்னை மிகத் தெளிவு செய்து
என்னையென்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்செய்வாய்
என்னும் பாரதியின் வரங்கேட்டலில் வருவது போல் மதி தனை மிகத்தெளிவு செய்து, கவலைகள் அறச்செய்து, சந்தோஷம் கொண்டிருக்கச்செய்யும் பள்ளியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்....................

Thursday, April 19, 2012

இந்தியாவோடு வர்த்தகத் தொடர்பு கொள்வீர்களா - என்ன சொல்கிறார்கள் வெளிநாட்டவர்கள்

உலகப்பொருளாதாரம் ஆட்டம் கண்ட நிலையில், இந்தியப்பொருளாதாரம் நிலையாகவே இருந்தது. உலகில் பல்வேறு வங்கிகள் மூடப்பட்ட போது எஸ்.பி.ஐ யின் லாபம் உச்சத்திலிருந்தது. இந்த அடிப்படை பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பயன்படுத்தி அன்னிய முதலீட்டாளர்களை நம் பக்கம் ஈர்க்க நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம் - காமன் வெல்த் கேம்ஸ். அது முடிந்து நாம் பட்ட கேவலம் - சந்தி சிரித்தது எல்லாம் பழைய கதை. அதைப் பற்றி இப்போது பேச வேண்டியதன் அவசியம் என்ன? காரணம் ரிக் பிர்ச்.

காமன் வெல்த்தின் ஓப்பனிங் செரிமனி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.(www.youtube.com/watch?v=jZOhfEJc2e8 )மிக அருமையான லேசர் ஷோ, வாண வேடிக்கைகள். இதனை வடிவமைத்து செயல்படுத்தியவர்தான் ரிக் பிர்ச். இவர் 6 ஒலிம்பிக் போட்டிகளில் நிகழ்ச்சிகளை ஆர்கனைஸ் செய்தவர். இவ்வளவு அனுபவம் வாய்ந்த இவரது கருத்தை அடிப்படையாகக் கொண்டு பிபிசி ரேடியோ சமீபத்தில் ஒரு கேள்வியை எழுப்பியது - பிஸினஸ் செய்வதற்கு இந்தியா ஒரு மோசமான நாடா? இந்தக்கேள்வி எழும்பும் படியாக ரிக் பிர்ச் சொன்னது - கரஸ்பான்டென்ஸுகளுக்கு முறையான பதில் அளிப்பதில்லை. எனக்கு பாக்கி $ 3,50,000. இது போல் வெளிநாட்டைச் சேர்ந்த 30 கான்டிராக்டர்களுக்கு மொத்த பாக்கி - $ 80 மில்லியன். 2 கான்டிராக்டர்களுக்கு மட்டுமே முழுத்தொகையும் செட்டில் செய்யப்பட்டுள்ளது. INDIA - I'll Never Do it Again இப்படி கூறி முடிக்கிறார் ரிக் பிர்ச். அவமானம்.

பொதுவாக நம் மனப்பான்மை இத்தன்மையாதகவே இருக்கிறது. ஒரு வேலையை முடிப்பதாக நாம் ஒப்புக்கொண்டோமேயானால் அதை தலை போனாலும் செய்து முடிக்கவேண்டும் என்ற சின்சியாரிட்டி எல்லாம் இன்று காணக்கிடைக்காதவை. எங்கள் டீமுக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டது. இதை 10 நாட்களில் முடித்துவிடுவீர்களா என்று கேட்டார் தலைவர். கட்டாயம் முடிப்போம் என்றார் எங்கள் டீம் லீடர். தலைவர் சென்ற பிறகு எப்டிங்க இத 10 நாள்ல முடிக்க முடியும். நீங்க பாட்டுக்கு சொல்லீட்டீங்க என்று என் டீம் லீடரைக் கேட்டேன். சும்மா சொல்ல வேண்டியது தான். 10 நாளுக்கப்புறம் பாத்துக்கலாம் என்றார். ஷாக். இட்ஸ் சீப். இதைத்தான் செய்யமுடியும். இதை செய்யமுடியாது என்று நேரடியாகச் சொல்லக்கூடிய தைரியமும், அடிப்படை நேர்மையும் ஏன் இல்லை? ஒரு பிரச்சினையை அந்த நேரம் தள்ளி வைத்தால் போதுமா? இப்படிப்பட்ட மனப்பான்மை நம் மீதான அடிப்படை நம்பகத்தன்மையைப் பாதிக்கிறதே.

ஒரு ஒப்பந்தந்திற்குள் செல்லும்முன் அதன் எல்லா கூறுகளையும் ஆராய்ந்து பின்னர் ஒப்புக்கொள்வோம். அப்படி ஒப்புக்கொண்டதை எப்பாடுபட்டேனும் செய்து முடிப்போம்.

எண்ணித் துணிகக் கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

Tuesday, April 3, 2012

பிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்

இன்றைய செய்திகளில் ஒன்று இது - ஹங்கேரிய பிரதமர் பால் ஸ்மித் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். காரணம் இவர் தனது பிஹெச்டி தீஸிஸைக் காப்பியடித்து எழுதி சப்மிட் செய்துள்ளார். இதனால் இவரது டாக்டர் பட்டத்தையும் பல்கலைக்கழகம் பறித்துக்கொண்டது. இதை கேள்விப்படும்போது நம் நாட்டு பிஹெச்டியின் தரத்தைப் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது.

பிஹெச்டி செய்வதற்கு PG டிகிரி முடித்திருக்கவேண்டும். M.Phil முடித்திருந்தால் பிஹெச்டி 2 வருடத்தில் முடித்துவிடலாம். இல்லாவிட்டால் 3 வருடம். நம் ஆராய்ச்சி மாணவர்களின் தரம் எந்த அளவில் இருக்கிறது? ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பல்வேறு ஸ்காலர்ஷிப்புகள் availableஆக இருக்கின்றன. JRF க்ளியர் செய்பவர்களுக்கு மாதம் ரூ.14000 scholarship. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு மாதம் ரூ.14000 ராஜீவ்காந்தி fellowship, இவை தவிர தனிப்பட்ட மனிதர்கள் வழங்கும் endowment scholarship அனைத்தும் கிடைக்கிறது. லேப் வசதிகள், லைப்ரரி வசதிகள், போக்குவரத்தில் சலுகைகள் இவ்வளவும் கிடைக்கப்பெறுகிறார்கள்.

அனைத்தும் இருந்தும் ஒரு path breaking, innovative invention என்பது ஏன் இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது? முக்கிய காரணம் - மாணவர்களின் சோம்பேறித்தனம், பொறுப்பெடுத்துக் கொள்வதில் காட்டும் சுணக்கம். அனைத்து வசதிகளையும் அரசிடம் இருந்து பெறும் ஆராய்ச்சி மாணவர்கள் உழைக்கப் பயப்படுகின்றனர். இவர்கள் படிக்கவோ, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளவோ ஆர்வம் காட்டுவதில்லை என்பது கசப்பான உண்மை. Exceptions - விதிவிலக்குகள் நிச்சயம் இருக்கிறார்கள். ஆனால் மிகக் கம்மியான சதவீதத்தில்.

2 வருடம் சும்மா பொழுதைப் போக்கும் ஆராய்ச்சி மாணவர்கள், 3வது வருடத்தில் தீஸிஸ் என்ற பெயரில் எதையாவது எழுதிக்கொடுத்து கடனைக் கழிக்கிறார்கள். இதை எழுதிக்கொடுக்கவென்று சென்னையில் மூலைக்கு மூலை நிறுவனங்கள் இருக்கின்றன. இவர்கள் செய்வது cut and paste வேலைதான். பிற ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்து அப்படியே சுட்டு அதை ஒரு அவியலாக்கி ஒரு ஆராய்ச்சி முடிவாகக் கொடுக்கிறார்கள்.

இந்த தீஸிஸ், வெளிநாட்டுப் பேராசிரியர்களின் ரெவ்யுவுக்காக வெளிநாடு செல்லும். ஒரு முறை இப்படி அனுப்பப்பட்ட ஒரு தீஸிஸ், அந்த ஆராய்ச்சி மாணவர் எந்தப் பேராசிரியரின் புத்தகங்களிலிருந்து காப்பியடித்தாரோ அவர் கைக்கே ரெவ்யுவுக்குப் போய்விட்டது. பலர் இதே வேலையைச் செய்தாலும் அம்மாணவரின் கெட்ட நேரம் - அவர் மாட்டிக்கொண்டார். மாட்டாத ஆயிரக்கணக்கானோர் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். பின்னர் அம்மாணவர் தண்டிக்கப்பட்டார்.

Plagiarism என்பது மிகப் பரவலாக ஆராய்ச்சி மாணவர்களிடையே உள்ளது. இதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் போதுதான் நம் நாட்டில் ஆராய்ச்சியின் தரம் உயரும்.

Saturday, March 31, 2012

அபிராமி மெகா மால் - ஒரு ரெவ்யூ

குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை விட்டாயிற்று. எங்கயாவது கூட்டிட்டுப் போங்க என்ற பிள்ளைகளின் நச்சு ஆரம்பித்திருக்கும். சென்னையில் சின்ன பிள்ளைகளுக்கு ஏற்ற இடம் என்று பார்த்தால் - பீச், ஜூ, கிண்டி ஸ்நேக் பார்க் - இவை தான் (வேறு ஏதாவது இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் நண்பர்களே). இப்போது அந்த லிஸ்ட்டில் முக்கிய இடம் பிடித்திருப்பது அபிராமி மெகாமால். எப்படியிருக்கிறது இது? கொடுக்கப்படும் விளம்பரம் வொர்த்தி தானா? பார்ப்போம்.
பிள்ளைகளுக்கு ஒரு 3டி ஷோ இருக்கிறது. அதற்கு நுழைவு கட்டணம் ரூ.120. ஷோ 20 நிமிடங்கள் நடக்கிறது. ரூ.120 கட்டணம் வொர்த்தி என்று தான் நினைக்கிறேன்.ஷோவைப் பிள்ளைகள் மிகவும் ரசித்தனர்.

மேஜர் அட்ராக்ஷனாக அவர்கள் பிரமோட் செய்வது ஸ்நோவேர்ல்ட். நாங்கள் போன நேரம் ரெனவேஷனுக்காக அது பூட்டப்பட்டிருந்தது. ஆனால் இதைப்பற்றிய எந்த அறிவிப்பும் இவர்களின் விளம்பரங்களில் இல்லை. பிள்ளைகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். சரி முன்னால் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று பார்த்தால் வேகமாக ஒருவர் வந்து போட்டோலாம் எடுக்கக்கூடாதுங்க என்று சொல்லிவிட்டுச் சென்றார். இதே ஆர்டர்தான் கிஸ்ஸிங் கார்ஸ் இடத்திலும். ஏன் புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கிறார்கள் என்று புரியவில்லை. அப்படி பூட்டி வைத்துக்கொள்ளும் படி extra ordinary ஆக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்புறம் ஏன் இந்த பில்ட் அப்???

அக்வேரியம் என்று ஒன்று வைத்து ரூ.30 ஒரு ஆளுக்கு வசூலிக்கிறார்கள். நிச்சயம் its not worthy. ஒரு ப்ளே ஏரியா இருக்கிறது. இங்கும் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை - ஸ்ஸ் அப்பா முடியல. ஒரேயொரு அன்வான்டேஜ் - இங்கிருக்கும் ப்ளே மெஷின்களில் வின்னிங் டிக்கெட் நிறைய வருகிறது. அனேகமாக எல்லா பிள்ளைகளுமே எளிதாக ஏதாவது ஒரு சிறிய பரிசை வெல்கிறார்கள்.

தியேட்டர்கள் ஒவ்வொன்றும் ஒரு தீம் என்றார்கள். எங்களால் அனைத்தையும் விசிட் செய்ய முடியவில்லை. அதனால் அதைப்பற்றி அதிகம் கூற முடியவில்லை.

இன்னொரு விஷயம் - இங்கு புட் கோர்ட்டில் நிறைய ஸ்டால்களில் உணவு நன்றாக இருக்கிறது. 3டி ஷோவைத் தவிர வேறெதுவும் தனித்துவமிக்கதாக இல்லை. ஒரு வேளை ஸ்னோ வேர்ல்டு திறந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கலாம். மற்றபடி வேறு அனைத்துமே சிட்டி சென்டர், எக்ஸ்பிரஸ் அவென்யு போன்ற மற்ற மால்களில் இருப்பவைதான்.

Monday, March 19, 2012

பேஸ்புக் பின்விளைவுகள்

பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க்கிங் தளத்தில் இன்றைய தேதிக்கு நமக்குத் தெரிந்த 4 பேரில் கட்டாயம் 3 பேர் அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள். அதை ரெகுலராக அப்டேட்டும் செய்கிறார்கள். ஒரு அமெரிக்கத் தன்னார்வ நிறுவனம் சமீபத்தில் நடத்திய சர்வேயின்படி (நன்றி-டைம்ஸ் ஆப் இண்டியா), ஒரு வாரத்தில் 5 மணி நேரத்துக்கும் அதிகமாக பேஸ்புக்கில் இருப்பவர்கள், தங்களை விட தங்கள் நண்பர்களின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருப்பதாகக் கருதுகிறார்களாம். மேலும் மற்ற அனைவரும் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறார்களாம்.

இந்த சர்வே முடிவுகளுக்கு நாம் அமெரிக்கா வரை போகத்தேவையில்லை. நாமே சில நேரங்களில் இப்படியொரு நினைப்பிற்கு ஆட்பட்டிருப்போம். கணவரின் தோளில் தலை சாய்த்தபடி சிரிக்கும் தோழியின் புகைப்படத்தைப் பார்க்கும்போது, தவிர்க்க முடியாமல் அன்று நம் வீட்டில் நடந்த அல்ப காரணத்துக்காக நடந்த சண்டை நினைவில் உறுத்தும் (ஆரம்பிச்சுட்டாங்கடா என்ற பிள்ளைகளின் கமெண்ட்ஸோடு ;) ). உடனே மற்ற அனைத்து தம்பதிகளும் எப்போதும் சிரித்துக்கொண்டு காக்க காக்க சூர்யா ஜோதிகா போல் இருப்பதுபோல் நினைத்துக்கொள்கிறோம். யார் கண்டார்கள் - தோழி வீட்டில் முந்தைய நாள் என்ன குடுமிப்பிடி சண்டையோ ;)

நடைமுறை உண்மை என்பது தம்பதிகள் சில சமயங்களில் Made for each other, சில சமயங்களில் Mad at each other and not mad(e) for each other. இது தானே அனைத்துக்குடும்பங்களிலும் நடப்பது.

புகைப்படங்கள் பொய்சொல்லும். நமது மிகச்சிறந்த புகைப்படங்களாக நாம் நினைப்பவற்றைத்தான் அப்லோட் செய்கிறோம். எல்லோரும் அப்படித்தான். நாம் நினைப்பது போல் அல்ல - எல்லோர் வாழ்க்கையிலும், நம் வாழ்க்கையில் இருப்பதைப் போன்றே ஏற்றத்தாழ்வுகள் உண்டு. மன நிம்மதிக்கு ஒன்று பேஸ்புக் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள் அல்லது மேல் சொன்னவற்றை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

Saturday, March 10, 2012

சூர்யா தோல்வி

பெரிய திரை சூப்பர் ஸ்டார்கள் சின்னத்திரையிலும் தலைகாட்டுவது அனைத்து இந்திய மொழித்தொலைக்காட்சிகளிலும் நடக்கும் ஒரு நிகழ்வு. அமிதாப், ஷாருக், சல்மான் முதல் நம் சரத், சூர்யா வரையில் கேம் ஷோக்களில் தலை காட்டிவிட்டனர். இதில் பாலிவுட் நடிகர்களில்அமிதாப், ஷோவை சூப்பர் ஹிட்டாக்கினார். சல்மான் நடத்தும் போதும் டிஆர்பி ரேட்டிங் நன்றாகவே இருந்ததாக சர்வேக்கள் சொல்கின்றன. ஆனால் ஷாருக்கால் டிஆர்பியைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

விஜய் டிவியின் கேம் ஷோவைப் பார்க்கும்போது மிகுந்த அலுப்புத் தட்டுகிறது. டிஆர்பி ரேட்டிங்கும் சரியில்லையாம். ஒரு கேம் ஷோவை சுவாரசியமாக்குவது அதில் கேட்கப்படும் கேள்விகள், ஷோவை நடத்தும் ஹோஸ்ட், பார்வையாளர்களுக்கு ஷோவில் இருக்கும் பங்கு. இவற்றில் அனைத்திலுமே இந்த ஷோ பெயிலியர்தான்.

முதலில் இதில் கேட்கப்படும் கேள்விகளைப் பார்ப்போம் - ராமனின் தாயார் யார்? - பதிலுக்கான சாய்ஸ்களில் ஒன்று சீதா. உறங்கும் நேரம் தனிமை தனிமையே - இந்தப்பாடலில் இடம்பெறும் நகரம் எது? இன்னும் எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்று மட்டும் தான் கேட்கவில்லை. பார்வையாளர்களையும், பங்கேற்பவர்களையும் மிகவும் அன்டர் எஸ்டிமேட் செய்கின்றனர். இந்த மாதிரியான அரைவேக்கட்டுத்தனமான கேள்விகள் வெறுப்பேற்றுகின்றன.

அடுத்து ஹோஸ்ட் - சூர்யாவால் இந்த ஷோவைச் சுமக்க முடியவில்லை. He could not carry the show. மிகவும் பரிதாபமாக அந்த சீட்டில் அமர்ந்திருக்கிறார். மேலும் அவரால் ஆடியன்ஸோடு ரிலேட் செய்ய முடியவில்லை. ஹாட்சீட்டில் அமர்ந்திருப்பவரோடு மட்டுமே தொடர்பு கொள்கிறார். நான் சொல்வது உயிரோட்டமுள்ள ஒரு உரையாடலைப் பற்றி. எனவே பார்வையாளர்களால் இந்த ஷோவோடு தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ள முடியவில்லை. மனம் தானாகவே அமிதாப்போடு கம்பேரிஸனில் இறங்கி விடுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நிச்சயம் சூர்யாவுக்கு இந்த ஷோ தோல்வியே. மானிடரி கெய்ன்ஸ் பற்றி நாம் கணக்கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

Monday, March 5, 2012

நண்பர்களே நமது பிளாகிற்கு லீப்ஸ்டர் விருது



என் இனிய வாசக நண்பர்களே நமது பிளாகிற்கு லீப்ஸ்டர் விருது வழங்கியிருக்கிறார் நண்பர் கவிப்ரியன். இந்த பிளாகிற்குக் கிடைத்துள்ள இவ்விருது மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. எந்தவொரு வேலைக்கும் கிடைக்கும் அங்கீகாரமே அந்த வேலையைத் தொடர்ந்து செய்வதற்கான ஊக்கத்தை அளிக்கிறது.. இந்த விருது 200க்கும் குறைவான பின்தொடர்பவர்களை உடைய புதிய தளங்களுக்கு அளிக்கப்படுகிறது. என்னுடைய தளத்தையும் வாசித்து அதற்கும் அங்கீகாரம் அளித்த நண்பர் கவிப்ரியனுக்கு நன்றி.

இதற்கு பின் நான் ஏதாவது 5 வலைப்பூக்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும். ஒன்று எனக்கு இதை அளித்த கவிப்ரியன் அவர்களின் வலைப்பூவிற்கு. மற்றவை மற்ற வலைப்பூக்களை மேய்ந்து பார்த்தபின் ;).

வாசித்து ஊக்கப்படுத்தும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

Thursday, March 1, 2012

நடிகர் ஜீவா செய்வதை உங்களால் செய்ய முடியுமா?

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், குறிப்பிடக்கூடிய சில நல்ல படங்களில் நடித்தவருமான நடிகர் ஜீவா, விஜய் டி.வி நண்பன் பட புரமோஷன் நிகழ்ச்சியில் சொன்ன ஒரு விஷயம் இது - எனக்கு தற்சமயம் நடிக்கப் பிடித்திருக்கிறது. அதனால் நடிக்கிறேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டுமென்பது என் விருப்பம். இன்னும் சில வருடங்களில் நடிப்பது எனக்கு பிடிக்காமல் போகுமேயானால் நடிப்பை விட்டுவிட்டு எனக்குப் அந்நேரம் பிடித்த தொழிலைச் செய்ய கிளம்பிவிடுவேன்.

இவரது இந்த கருத்து மேம்போக்காக பார்க்கும்போது சாதாரணமாயிருந்தாலும் கொஞ்சம் யோசித்தால் ஜீவா கொடுத்து வைத்தவர் என்றே தோன்றுகிறது. பிடித்த தொழிலைச் செய்வது என்பது பெரும்பாலானோருக்கு வாய்ப்பதில்லை. ஐ.டி துறையிலிருந்து கொண்டு கல்லூரி ஆசிரியராக இருப்பதைப் பற்றி கனவு காண்பவரையும் (சம்பளம் ஒரு தடை - மேலும் பிழைக்கத்தெரியாதவன், திறமையில்லாதவன் என்று பல பெயர்கள் கிடைக்கும்), கல்லூரி ஆசிரியராக இருப்பவர் ஐடி துறைக்குள் செல்ல முடியவில்லையே என்று ஏங்கித்தவிப்பதையும் காண முடிகிறது. உண்மையில் கனவுகளைத் துரத்துவதற்கு மிகுந்த தைரியமும், சாதகமான குடும்பச்சூழலும் கட்டாயம் தேவை.

தி அல்கெமிஸ்ட் என்றொரு அருமையான நாவல். இந்நாவலின் நாயகன் ஒரு இடையன். அவனது காலத்தில் கடை வைத்திருப்பவனுக்குத்தான் மதிப்பு-அவனுக்குத்தான் திருமணத்துக்குப் பெண் கொடுக்கப் பிரியப்படுவார்கள். ஆனால் நம் கதாநாயகன் பயணம் செய்வதிலும், புதிய இடங்களை, நண்பர்களை அடைவதிலும் தணியாத தாகம் உள்ளவன். எனவே ஓரிடத்தில் அமர்ந்து கடை நடத்த அவன் பிரியப்படவில்லை. எனவே எப்போதும் ஏகாந்தமாக அலைந்து திரியக்கூடிய இடையன் தொழிலை அவனது தகப்பனின் விருப்பத்துக்கு மாறாகத் தேர்ந்தெடுக்கிறான். வெண்மேகம் போல் பிரபஞ்சமெங்கும் பயணப்படுகிறான்.அந்நாவலில் ஓரிடத்தில் சொல்கிறார் ஆசிரியர் Paulo Coelho - If you really want something the entire universe conspires to help you achieve that. ஆனாலும் இதன் நடைமுறை சாத்தியம் பற்றி எனக்கு இன்னும் நம்பிக்கையில்லை. லோன் வாங்கிப் படிக்கும் ஒரு மாணவன் குறைந்த சம்பள வேலையே தனக்கு ஆத்ம திருப்தி தருவதாகக் கருதினால் கடனை அடைப்பதும், குடும்ப பாரத்தை ஏற்பதும் எவ்வகையில் சாத்தியம்? எனவே தான் சொல்கிறேன் தான் விரும்பிய தொழிலைச் செய்பவர்கள் பாக்கியவான்கள். ஜீவா அவரே சொல்லிக்கொள்வதுபோல் சில்வர் ஸ்பூனோடு பிறந்தவர். அவருக்குப் பிடித்தால் நடிக்கலாம், பிடிக்காவிட்டால் ஹோட்டல் நடத்தலாம் - புலியைப் பார்த்து பூனைகள் சூடு போட்டுக்கொள்ளக்கூடாது.


Wednesday, February 15, 2012

டீன் ஏஜ் ப்ரக்னன்ஸியைத் தவிர்க்க இங்கிலாந்து அரசின் திட்டம் - கொதிக்கும் பெற்றோர்

உலக அளவில் டீன் ஏஜ் கருத்தரித்தல் அதிகமாக இருப்பது ஐரோப்பாவில். அதுவும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் என்கிறது சர்வே. இதைக்குறைப்பதற்காக சமீபத்தில் இங்கிலாந்து அரசு ஒரு திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இத்திட்டம் பெற்றோரின் கடும் கோபத்திற்கும், கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது.
இங்கிலாந்து சவுத்தாம்ப்ட்டன் பகுதியில் சுமார் 9 பள்ளிகளைச் சேர்ந்த 13வயதான பெண்குழந்தைகளுக்கு கருத்தடை சாதனத்தைப் பொருத்தியுள்ளது அரசு.பெற்றோரிடமும் இது குறித்து தெரிவிக்கவில்லை. தற்செயலாக வெளியே வந்துள்ள அவ்விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டீன் ஏஜ் கருத்தரித்தலைக் குறைப்பதற்கு நிச்சயம் இதுவல்ல வழி. முறையான உடலியல் அறிவும், பாலியல் விழிப்புணர்வுமே சரியான வழியாகும். பெற்றோருக்கே தெரியாமல் ஒரு 13 வயது குழந்தைக்கு கருத்தடை சாதனம் பொருத்துவது குழந்தைகளுக்கு எதிரான குரூரமான வன்முறை என்றே கருதுகிறேன். அரசே இப்படியொரு வேலையைச் செய்வது மிகவும் கண்டிக்கத்தக்க அறிவீனமான செயல். பிள்ளைகளுக்கு வீட்டைத் தவிர வேறு எங்குமே பாதுகாப்பில்லை. குழந்தைகளை அடிக்காதீர்கள், கையால் சாப்பாடு கொடுக்காதீர்கள் என்று அபத்தமாக ரூல்ஸ் பேசுபவர்கள் குழய்தைகளுக்கு கருத்தடை சாதனம் பொருத்துகிறார்கள் - என்ன அறிவு, என்ன மேதைமை அடாடாடா

Saturday, January 28, 2012

சிம்புவின் எக்ஸ்ட்ரா க்ளாஸஸ்

என் பையனைப் பொறுத்தவரைக்கும் ஸ்கூலிலிருந்து வந்தவுடனே கான்வர்ஸேஷன் வகுப்பு,ஸ்கூல் வொர்க் பண்ண,ஸ்டடி பண்ண ஒரு ட்யூஷன், தமிழுக்கு ஒரு டியூஷன் - இப்படி 3 ட்யூஷன் போறான். கர்நாடக சங்கீதம் கத்துக்கறான். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கராத்தே வகுப்பு, ஜிம்னாஸ்டிக்ஸ் வகுப்பு, தலைகீழா நடப்பான், சம்மர்ஸால்ட் அடிப்பான். பின்பாக பல்டி அடிப்பான். சனி ஞாயிறில் சினிமா பைட்டிங் கத்துக்கறான். கம்புச்சண்டை, மான் கொம்புச்சண்டை, குத்துச்சண்டை அதுக்கான மாஸ்டர் வச்சு கத்து தர்றேன். அப்புறம் டான்ஸ் வகுப்பு.

----- 1990ல் குமுதத்தில் டி.ராஜேந்தரின் பேட்டி. இந்த அளவுக்கு ஒரு பிள்ளையை வதைக்க வேண்டுமா? இவர் நார்வேயில் இருந்திருந்தால் சிம்புவை அரசுதான் வளர்த்திருக்கும். சமீபத்தில் நார்வேயிலிருக்கும் ஒரு இந்தியத்தம்பதியின் குழந்தைகளை அவர்கள் சரியாக வளர்க்கவில்லை என்று சொல்லி (3 வயது பையன் இன்னும் அப்பாவோடு தூங்குகிறான், கையால் சாப்பாடு கொடுக்கிறார்கள்-ஸ்பூன் பயன்படுத்துவதில்லை) நார்வே அரசாங்கம் அந்தப்பிள்ளைகளை அதுவே எடுத்து வளர்க்கிறது. இந்தக்காரணங்கள் நமக்கு மிகவும் அபத்தமாக இருக்கின்றன. ஆனால் சமீபத்தில் Amy Chua என்ற சீனப்பெண் எழுதிய Tiger Mom என்ற நாவல் மேற்கத்திய உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனர்களின் குழந்தை வளர்ப்புமுறை பெரும்பாலும் நம் முறையை ஒத்துள்ளது. எனவே அவருடைய புத்தகத்தில் அவர் குழந்தையை அவர் வளர்த்தவிதம் குறித்து தெரிவித்துள்ள கருத்துகளில் ஏதும் தவறிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. (டி.ஆர் அளவுக்கு நிச்சயமாக பிள்ளைகளை வதைக்கக்கூடாது என்றாலும்கூட குழந்தைகள் தவறு செய்தால் அடித்து திருத்துவது, மியுசிக் வகுப்புகளைக் கட்டாயமாக்குவது போன்றவை). குழந்தையை அடிப்பதா என்கிறார்கள் மேற்கத்தியர்கள் - கையால் சாப்பாடு கொடுப்பது பெரிய குத்தமா என்கிறோம் நாம்.

பிள்ளைகளை நல்வழிப்படுத்துவது பெற்றோரின் கடமை. அவர்களின் உடல் உள்ள ஆன்ம வளர்ச்சியைக் கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. எனினும் பிள்ளைகளின் வாழ்க்கையில் நம்முடைய எல்லையைப் பின்வரும் கிப்ரனின் வரிகள் கொண்டு வரைந்து கொள்வோம்.

Your Children are not your children.

They come through you and not from you.

though they are with you, they belong not to you.

You may give your love but not your thoughts..............................

உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்களல்ல.

அவர்கள் உங்கள் மூலமாக வருகிறார்கள் - உங்களிடமிருந்து அல்ல

அவர்கள் உங்களோடிருந்தாலும் உங்களுக்குரியவர்களல்ல

அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுக்கலாம் - உங்கள் எண்ணங்களை அல்ல

Friday, January 20, 2012

ஈஸ்ட்மேன் கோடக் நிறுவனம் திவாலாகும் நிலையில்

கோடக் நிறுவனம் ஜார்ஜ் ஈஸ்ட்மேனால் 1880ம் வருடம் நிறுவப்பட்டது. கைக்கேமரா, புகைப்பட நெகட்டிவ், தற்சமயம் முழுக்க முழுக்கப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் காமெரா அனைத்தும் இவர்களின் கண்டுபிடிப்பே. 1100க்கும் அதிகமான பேடன்ட்டுகளையும் இவர்கள் வைத்துள்ளனர்.

புகைப்படத்துறையிலும், திரைப்படத்துறையிலும் கோலோச்சியவர்கள் இவர்கள். எம்ஜிஆர், சிவாஜி திரைப்படங்களை ஈஸ்ட்மேன் கலரில் என்று விளம்பரம் செய்த காலம் ஒன்றுண்டு. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்தபோது தன்னுடன் ஒரு கோடக் காமெராவைத்தான் எடுத்துச்சென்றார். ஒரு காலத்தில் கிட்டத்தட்ட 64000 தொழிலாளர்களுடன் செயல்பட்டு வந்த நிறுவனம் இன்று 17000 தொழிலாளர்களுடன் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இதன் சந்தை மதிப்பும் சரிந்துவிட்டது.

இதன் வீழ்ச்சிக்குக் காரணமாக சொல்லப்படுவது, லேட்டஸ்ட் டெக்னாலஜிக்கு விரைவாக அடாப்ட் ஆகாததேயாகும். உதாரணமாக இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட டிஜிட்டல் காமெரா தயாரிப்பில் இவர்களே முழுமூச்சாக ஈடுபடவில்லை. தற்சமயம் தங்கள்வசமிருக்கும் 1100 பேடண்ட்டுகளை விற்று நிலைமையைச் சமாளிக்க முயன்றுகொண்டிருக்கிறது இந்நிறுவனம்.

மாற்றம் ஒன்றே மாறாதது. இதை உணர்ந்து, ஏற்க மறுத்தால் ஜாம்பவன்களாய் இருந்தாலும் மண்ணைக் கவ்வ வேண்டியதுதான் என்பதே கோடக் நமக்கு சொல்லும் பாடம்.

Thursday, January 19, 2012

சீரக சம்பாவும் கோதுமையும் போதுமா? மல்லியும் ரோஜாவும் வேண்டாமா?

ஒரு கேள்வி கேட்கும் ட்ரெண்ட் இருக்கிறது. வாழ்க்கையின் சகல அங்கத்திலும் இது பரவியுள்ளது. சாப்பிடுவது, பார்ப்பது, கேட்பது, படிப்பது, எதையாவது கற்றுக்கொள்வது என்று அனைத்திலும். அது என்னவென்றால் - இதால் என்ன யூஸ் என்ற கேள்வி. தொடர்ந்து blog எழுதுகிறாயே - இதால் என்ன யூஸ்? அந்த நேரத்தில் இதை செய்யலாமே, அதை செய்யலாமே. பிள்ளைகள் பாடப்புத்தகம் தவிர மற்றதைப் படிப்பதால் என்ன யூஸ் - அதற்கு ஒலிம்பியாட்டுக்கு கோச் பண்ணலாமில்லையா? ப்ரண்டுடன் பேசிக்கொண்டிருந்தாயா - சரி, என்ன புதிதாக கற்றுக்கொண்டாய்? ப்ரெஞ்ச் படிக்க ஆசைப்படுகிறாயா - ஏதாவது வேலை வாய்ப்பு கிடைக்குமா அதிலிருந்து?

நாம் செய்யும் அனைத்துமே வயிற்றுப்பாட்டையும், சர்வைவல் திறனையும் மட்டுமே சார்ந்திருக்க வேண்டுமென்றால் கலையும், அழகும், இசையும் எதற்கு? வெறும் நெல்லை மட்டும் பயிரிட்டால் போதுமா? இவ்வுலகை அழகாக்க, மனதை மணமுள்ளதாக்க மல்லி வேண்டாமா? எதைச் செய்தாலும் monetary benefits, பொருள் ரீதியான ஆதாயம் கிடைக்க வேண்டுமென்ற அவசியமில்லை. சில காரியங்களை அதைச் செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமேவும் செய்வோம். அப்படிப்பட்ட காரியங்களாலேயே மனிதம் தழைக்கிறது.

Wednesday, January 18, 2012

தனுஷின் ஹைப்பர்கேமி பிரச்சனைகள்



சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, தனுஷ் ஆகியோர் ரஜினியின் புகழைப் பயன்படுத்தி ஆதாயம் அடைய முற்படுவதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இதில் ஐஸ்வர்யா, சவுந்தர்யாவை சொல்வது சரிதான். ரஜினியின் மகள் என்ற பேனர் இல்லாமல், ஐஸ்வர்யாவால் டைரக்ஷன் சான்ஸ் வாங்கமுடியுமா? அல்லது சவுந்தர்யாவால்தான் இந்த அனிமேஷன் வாய்ப்புகளைப் பெற முடியுமா?



ஆனால் தனுஷின் நிலையே வேறு. அவர் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்வதற்கு முன்பே 3 ஹிட் படங்களைக் கொடுத்துவிட்டார். நேஷனல் அவார்ட் வாங்கியிருக்கும் திறமையான நடிகர். இவற்றுக்கும் இவர் ரஜினியின் மருமகன் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ரஜினியின் பெயரைப் பயன்படுத்தி முன்னுக்கு வரவேண்டிய கட்டாயத்தில் அவர் இல்லை. இருப்பினும் அவர் ரஜினியின் மருமகனாக பார்க்கப்படுவதான உணர்வு அவருக்கு எப்போதும் இருக்கிறது. (சினிமாவில் நீங்கள் ரஜினியின் வாரிசா? - இல்லை நான் கஸ்தூரிராஜாவின் வாரிசு). பெப்சி உமா ஷோவில் திருமணமான புதிதில் - ஐஸ்வர்யா எப்படி இருக்காங்க? - ஏன் அவங்களப் பத்தியே கேக்குறீங்க. என் அம்மா அப்பா அண்ணா பத்தி கேளுங்க -புதுசா கல்யாணமான எந்த ஆணிடமும் மனைவியைப் பத்திதான் கேப்பாங்க தனுஷ். இது நீங்கள் ரஜினி மகளைத் திருமணம் செய்ததால் வந்த கேள்வி அல்ல.

தனுஷ் எப்போதும் இப்படியொரு தன்னுணர்வுடன் இருப்பதற்கு ஹைப்பர்கேமி தான் காரணம் - அதாவது நம்மை விட வசதியானவர் வீட்டில் பெண்ணெடுப்பது. எப்படி பார்த்தாலும் தற்சமயம் பொருளாதார ரீதியில் ரஜினியை விட தனுஷ் குறைவுதான். இதே தனுஷ் கமலஹாசனின் மகனாகவோ அல்லது ஒரு பெரிய குடும்பத்து - ஏவிஎம், டிவிஎஸ் etc etc - பிள்ளையாகவோ இருந்தால் யாரும் தனுஷை மாமனார் பெயரைப் பயன்படுத்துவதாக குறை சொல்லமாட்டார்கள்.

தனுஷ் இப்படியொரு ஹைப்பர்கேமி காம்ப்ளக்ஸில் தவிக்க வேண்டியதில்லை. கொலவெறி வெற்றிக்குப்பின் ஒரு வட இந்திய பேட்டியில் அவர் சொல்கிறார் - நல்ல வேளை இனிமேல் யாரும் என்னை ரஜினியின் மருமகன் என்று அடையாளப்படுத்த மாட்டார்கள். கவலைப்படாதீர்கள் தனுஷ் - உங்கள் திருமணத்திற்கு முன்னரே நீங்கள் உங்களை நிருபித்துவிட்டீர்கள்.

Tuesday, January 17, 2012

எப்போதும் சந்தோஷமாயிருக்க எளிய வழிகள்

கற்கால மனிதர்களின் வாழ்வியல் சூழல் - எப்போதும் ஆபத்து நேரலாம். அதனால் எந்நேரமும் தயாராயிருக்க வேண்டும் - என்ற மனநிலையிலேயே அவர்களை வைத்திருந்தது. இயற்கைச் சீற்றங்களால், வனவிலங்குகளால், நோய்களால், உணவு பற்றாக்குறையால் என்று அவர்கள் எப்போதும் மனதளவில் பிரச்சனைகளை எதிர்நோக்க தயாராயிருக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கின்றனர். இப்போது வாழ்வியல் சூழல் முற்றிலும் மாறியிருக்கிறது. பரிணாம வளர்ச்சியில் உடல் மாற்றம் அடைந்திருக்கிறது - மனம்? நிச்சயமாக இல்லை. எல்லாம் நிறைவாக இருக்கும் வேளையிலும் மனம் ஏதோவொரு முகம் தெரியா ஆபத்தைப் பற்றிய கற்பனை பயத்தில், கவலையில் உழல்கிறது. மனம் தீப்பந்தம் போல் கொழுந்துவிட்டெரியும் சூழ்நிலையிலும், கவலை மேகங்கள் அதைச் சூழ ஒரு நொடி போதும். மனதை அடக்கி அதனை எப்போதும் சந்தோஷம் கொண்டிருக்கச்செய்ய எளிய வழிகள் இவை -

1. ஒப்பிடாதீர்கள் - பேஸ்புக் ஸ்டேட்டஸில் ஆல்ப்ஸ் மலை அடிவாரத்திலிருந்து, லக்ஸுரி க்ருய்ஸில், லண்டன் வீதியில் போன்ற அப்டேட்டுகளைப் பார்க்கும்போது நாம் மெட்ராஸ் மொட்டை வெயிலில், HOD tortureல் என்று தான் status update செய்யவேண்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதற்காக கவலைகொள்ளாதீர்கள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் போக்கும், அர்த்தமும் வேறு. மற்றவர்களோடு நம்மை கம்ப்பேர் செய்வது மனக்கஷ்டத்துக்குத்தான் வழிவகுக்கும். அவ்வாறு ஒப்பீடுகள் வரக்கூடிய சந்தர்ப்பங்களைத் தவிருங்கள். 2. சின்ன விஷயங்களிலும் சந்தோஷமடையுங்கள். உதாரணமாக இந்த மென்பனிக்காலத்தின் காலையில் அருந்தும் அருமையான ஒரு கப் காபி, இளையராஜாவின் ஜெயா டிவி ஷோ etc, etc... வாழ்க்கை கடுமையானது. மகிழ்ச்சியாயிருக்க காரணங்களைக் கண்டுபிடியுங்கள்.

3. நன்றியுள்ளவர்களாயிருக்கப் பழகுவோம். எத்தனையோ பேர் எதுவமேயில்லாமலிருக்கும்போது, நான் இதைக் கணினியில் டைப் செய்யவும், அதை நீங்கள் வாசிக்கவும் சந்தர்ப்பம் கொடுத்த இறைவனுக்கு நன்றி.

4. தேவைப்படுபவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்வோம். பின் வருவது ஒரு நல்ல ஆர்கனைசேஷன். முடிந்தால் அவர்களோடு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். ஒருபோதும் திருப்பிச்செலுத்தமுடியாத வகையிலான உதவிகளைச் செய்யுங்கள். www.chennaisocialservice.org, Mr.Sivakumar : 9941014591. இதில் கிடைக்கும் மனநிறைவும் சந்தோஷமும் வேறெதிலும் இல்லை.

5. இறுதியாக இறைவனின் திருவடியை இறுகப்பற்றிக்கொள்வோம். ஒன்றை நினைத்து ஒன்றை மறந்து ஒடும் மனம் எல்லாம் நீயென்றறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே என்னும் தாயுமானவரின் என்றும் நினைவில் இருத்துவோம்

Friday, January 13, 2012

சென்னையில் அப்பார்ட்மெண்ட் வாங்கப்போகிறீர்களா - ஹிட்டன் காஸ்ட்டுக்கு பில்டர்களின் புது டெக்னிக்ஸ்

சென்னையின் ரியல் எஸ்டேட் பிசினஸ் நல்ல லாபத்தில் இயங்குவதாகச் சொல்கிறார்கள். சென்னை இப்போது க்ரேட்டர் சென்னையாக மாறியதால் புறநகர்களில் நிறையப் பகுதிகள் சிட்டி லிமிட்ஸுக்குள் வந்து விட்டன. அதனால் தென்சென்னை பகுதியில் புழுதிவாக்கம், உள்ளகரம், ஆலந்தூர், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் போன்ற ஏரியாக்களில் அப்பார்ட்மெண்ட்டுகளின் விலை எகிறிவிட்டது. 20,25 வருடங்களுக்கு முன் அங்கே நிலம் 1 கிரவுண்டு ரூ.10000-20000 என்று வாங்கிப்போட்டவர்களெல்லாம் இன்று கோடீஸ்வரர்கள். இப்படிப்பட்ட நில உரிமையாளர்களும் இன்று திடீர் பில்டர்களாக அவதாரம் எடுத்து அப்பார்ட்மெண்ட் கட்டி விற்க துவங்கிவிட்டார்கள்.

வீடு வாங்குபவர்கள் ப்ரொபஷனல் பில்டர்களிடம் வாங்காமல் இப்படிப்பட்ட திடீர் பில்டர்களிடம் மாட்டிக்கொண்டோம் என்றால் தொலைந்தோம். சில ப்ரொபஷனல் பில்டர்களிடமும் ட்ராபேக்ஸ் இருக்கலாம். ஆனால் இது என் மற்றும் என் நண்பர்களின் சொந்த அனுபவம். Hidden costs list பின் வருமாறு -


1.இந்த கார்ப்பெட் ஏரியா, ப்ளிந்த் ஏரியா,காமன் ஏரியா களேபரங்களில் நீங்கள் வாங்கும் வீட்டின் மொத்த அளவில் இருந்து கார்ப்பெட் ஏரியா 20% மட்டுமே குறைவாக இருந்தால் உங்கள் பில்டர் உங்களை ஏமாற்றவில்லை. உதாரணமாக நீங்கள் 850 சதுரடியில் வீடு வாங்கினீர்கள் என்றால் உங்கள் கார்ப்பெட் ஏரியா குறைந்தபட்சம் 680 சதுரடியாக இருக்க வேண்டும். கார் பார்க்கிற்குத் தனியாக 1 - 1.5 லட்சம் வாங்குவார்கள். ஆனால் இப்போது கார் பார்க்கிங் ஏரியாவையும் வீட்டின் அளவோடு சேர்த்துவிடுகிறார்கள். எங்கள் வீட்டின் கார் பார்க் ஏரியா 60சதுரடி. ஒரு சதுரடியின் விலை ரூ.3500. எனவே நாங்கள் கார் பார்க்கிங்குக்கு கொடுத்த தொகை ரூ.210000 - கிட்டத்தட்ட குறைந்தபட்சம் ரூ.60000 எக்ஸ்ட்ரா.

2. வீட்டுக்கு டைல்ஸ் போடும் நேரத்தில் ஒரு டைலுக்கு ரூ.40 தான் தருவேன் என்பார் பில்டர். மேற்கொண்டு ஆவதை நாம் தான் செலவழிக்க வேண்டும். ஒரு டைல் ரூ.100க்காவது வாங்கினால்தான் தரமானதாக இருக்கும். 800 சதுரடிக்கு ஆகும் டைல்ஸ் செலவு - ரூ80000. இதில் பில்டர் தருவது ரூ.32000 மட்டுமே. நமக்கு ஆகும் எக்ஸ்ட்ரா ரூ50000. மேலும் குழாய் இணைப்புகள், வாஷ்பேசின் அனைத்துக்குமே இருப்பதிலேயே லோ காஸ்ட் ஐட்டங்கள்தான் தருவோம் என்பார் (இந்த கண்டிஷன் எதையுமே நீங்கள் வீடு புக் செய்வதற்கு முன் சொல்லமாட்டார்). இவற்றுக்கு எப்படியும் ரூ. 30000 எக்ஸ்ட்ரா.

3.வீட்டில் ஒரு ஸ்விட்ச் போர்டு அதிகம் கேட்டால் கூட ஒரு ஸ்விட்ச் 20 ரூபாய் என்று கணக்கு சொல்வார். நாம் விதியை நொந்து கொண்டு கொடுக்கவேண்டியதுதான்.

4. என்ன பணம் கொடுத்தாலும் பில் உடனே வாங்கிக்கொள்ளுங்கள். சாயந்தரம் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள் - எவ்வளவு அவசரத்திலிருந்தாலும் பரவாயில்லை. என் தோழி கவுரவமான உயர்தொழிலில் இருப்பவர். அவர் ரூ.5000த்திற்கு பில் அப்புறம் வாங்கிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டார். பில்டர் நீங்கள் 5000 ரூபாய் தரவேயில்லை என்று சொல்லி மேற்கொண்டு 5000 வாங்கிவிட்டார். இவ்வாற் நாம் 5000 ஏமாந்து, அவரை 5000 ரூபாய்க்கு ஏமாற்றியதாக அவப்பெயரையும் வாங்கிக்கட்டிக்கொள்ளவேண்டியதுதான்.

இப்படி அப்படி என்று ரூ2 லட்சம் எக்ஸ்ட்ரா கறந்துவிடுவர். அத்துடன் மிகவும் மரியாதைக்குறைவான, நம்பிக்கையற்ற ட்ரீட்மெண்ட் நமக்கு கிடைக்கும். இந்த மாதிரி மோசமான அனுபவம் நல்ல established, professional பில்டரிடம் எங்களுக்கு ஏற்படவேயில்லை. வீடு வாங்குவது அனேகருக்கு வாழ்நாள் கனவு. வாங்கும் முன் பில்டரையும் கவனியுங்கள்.

Monday, January 9, 2012

ஒரு நற்செய்தி - புத்தகக்கண்காட்சியில் பூந்தளிர் அமர்சித்திரக்கதை தமிழில் கிடைக்கிறது

35ம் புத்தகக்கண்காட்சி சென்னையில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மிக மகிழ்ச்சியைத் தந்த விஷயம் - கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் அமர் சித்திரக்கதை தமிழில் கிடைக்கிறது.







அந்தப்புத்தகங்களின் அட்டையைப் பார்க்கும்போது, நாம் படித்த கல்லூரிக்கு செல்லும் போது , ஆத்மார்த்தமான நண்பனை நீண்ட நாட்கள் கழித்துப்பார்க்கும்போது, நம்முடைய ஆதர்ச எழுத்தாளரை நேரில் சந்திக்கும்போது ஆகிய தருணங்களில் எல்லாம் ஏற்படும் நெகிழ்வு ஏற்பட்டது. என்ன தான் ஆங்கில அமர் சித்திரக்கதையைப் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து, விநாயகரை கணேஷா என்றும், இராவணனை ராவணா என்று பிள்ளைகள் படிப்பதைப் பார்த்தாலும் பிள்ளைகள் நம் புராணங்களை நம் தாய்மொழியில் படிப்பதையே நான் விரும்புகிறேன். கும்பகர்ணனின் கதையைப் படித்து குழந்தைகள் சிரித்து சிரித்து குதூகலிக்கும்போது ஆங்கிலத்தில் இதையே அவர்கள் படித்திருந்தால் இந்தளவு அவர்களால் கதையோடு ஒன்றிப்போயிருக்க முடியுமா? என்று தோன்றியது. சந்தேகம்தான்.

சர்வைவலுக்குப் பிற மொழிகள் தேவைதான். ஆனால் மனம் ஒன்றவும், மனம் கரையவும் தாய்மொழியில் படிப்பதாலும் எழுதுவதாலும் மட்டுமே முடியும்.


பி.கு

அருமையான ஏற்பாடுகள் செய்திருக்கும் அமைப்பாளர்கள், அரங்கத்திற்குள் இருக்கும் காபி வெண்டிங் மெஷினின் காபி தரத்தைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும். நடந்து நடந்து காபி அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் அந்தக் காபியைக் குடிக்கவே முடியவில்லை. நிறைய பேர் பாதி கப்பில் குப்பையில் போட்டுவிட்டனர் - நான் உட்பட.





Thursday, January 5, 2012

இஞ்சிக்கு பேட்டன்ட் - இங்கிலாந்து கம்பெனி வாங்கிய பல்பு

இங்கிலாந்தைச் சேர்ந்த நிக்கோலஸ் ஜான் லார்கின்ஸ் என்ற கம்பெனி நுரையீரல் மற்றும் சுவாசக்கோளாறுகளுக்கான ட்ரீட்மெண்ட்டில் இஞ்சியின் பயன்பாட்டைத் தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகவும், அது தங்களுடைய அரிய கண்டுபிடிப்பு என்பதால் அதற்கு பேட்டன்ட் வழங்க வேண்டும் என்றும் யு.கே. பேட்டன்ட் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளது.


இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக இருமலுக்காகவும், ஜலதோஷத்துக்காகவும் நாம் இஞ்சியை வெவ்வேறு வடிவங்களில் சாப்பிட்டு வருகிறோம். வீட்டில் நமக்கு இருமல் இருந்தால் சின்ன வயசில் அம்மாவின் இஞ்சிக் கஷாயம், கொஞ்சம் பெரியவர்கள் ஆனவுடன் டீன் ஏஜ் ஸ்டேஜில் கஷாயம்லாம் குடிக்க முடியாது என்று சொல்லும் பருவத்தில் சரி இஞ்சி டீயாவது குடி என்பார்கள் தாய்மார்கள். அப்புறம் இஞ்சி மொரப்பா என்று ஒரு இஞ்சி மிட்டாய், மும்பையில் அட்ரக் சாய் என்ற பெயரில் இஞ்சி டீ- சளித்தொல்லைக்காக இவற்றையெல்லாம் காலங்காலமாக நாம் சாப்பிட்டு வருகிறோம். இதற்கு பேட்டன்ட் கேட்டு விண்ணப்பிப்பது ஒரு அன்னிய நாடு.

நல்ல வேளை - சரியான சமயத்தில் (அதாவது பேட்டன்ட் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டே வாரத்தில்) இந்திய CSIR மற்றும் Dept. of Ayush தலையிட்டு இந்தியாவின் பாரம்பர்ய மருந்து இது என்பதை 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவப்புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு விளக்கியிருக்கிறது. அதனால் பேடன்ட்டும் மறுக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் உஷாரா இல்லன்னா நம்ம இட்லி, பொங்கல், மண்பானை எல்லாத்துக்கும் பேட்டன்ட் வாங்கிடுவானுங்க போல

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes